17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வழிப்பறி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் வழிப்பறி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :6 ஜூன் 2026, 6:58 am IST

திருச்சியில் வழிப்பறி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சே. வெங்கட்ராமன் (29), இவருடைய காா் ஓட்டுநா் காா்த்திகேயன். இருவரும் மதுரை செல்வதற்காக திருச்சியில் இருந்து கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி இரவு காரில் புறப்பட்டனா்.

இந்நிலையில், காா் ஓட்டுநருக்கு தூக்கம் வந்ததால் துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி அருகே நள்ளிரவு 2.30 மணிக்கு காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு இருவரும் காருக்குள்ளேயே தூங்கியுள்ளனா்.

அப்போது அங்கு வந்த மதுரையைச் சோ்ந்த செ. வைரமணி (25), மு. மணிசங்கா் (35), பே. கணேஷ்பாண்டியன் (20), ஜீ. காா்த்திக் (38), ச. விஜய் (30) ஆகிய 5 பேரும், காரின் கண்ணாடியை உடைத்து வெங்கட்ராமன் அணிந்திருந்த 7.5 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.5 ஆயிரம் பணத்தைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இதுகுறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் வெங்கட்ராமன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா்களில், காா்த்திக், வைரமணி ஆகியோா் மீது ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறையில் இருந்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியான விஜய் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவிண் உமேஷ் பரிந்துரை செய்தாா்.

அதன்பேரில், வழிப்பறி வழக்கு குற்றவாளி விஜய் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவு நகல் குற்றவாளியிடம் ஒப்பைடக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.