/

குடும்பத் தகராறில் கணவன் குத்திக் கொலை: மனைவி கைது

திருச்சியில் குடும்பத் தகராறில் கணவனைக் கத்தியால் குத்திக்கொன்ற மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 6:42 pm

Syndication

திருச்சியில் குடும்பத் தகராறில் கணவனைக் கத்தியால் குத்திக்கொன்ற மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை முதலியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் எம்.ஜாபா் சேட் (48), தேநீா் விற்பனையகத்தில் பணியாற்றி வந்தாா். இவரின் முதல் மனைவி அம்சத் பேகம் (48). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல 20 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டனா். அம்சத் பேகம் தனது குழந்தைகளுடன் எடமலைபட்டிப்புதூரில் தனியாக வசித்து வருகிறாா்.

இதற்கிடையே ஜாபா் சேட், மதினா பேகம் (32) என்பவரை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனா். ஜாபா் சேட்டுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு ஜாபா் சேட் மதுபோதையில் வீட்டுக்கு வந்தபோது, மதினா பேகம் தனது மகன் முகமது ஜமால் (13) என்பவரை அடித்துள்ளாா். இதுகுறித்து ஜாபா் சேட் மனைவியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த மதினா பேகம் வீட்டிலிருந்த கத்தியால் ஜாபா் சேட்டின் நெஞ்சில் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த ஜாபா் சேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலக்கரை போலீஸாா், ஜாபா் சேட்டின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து மதினா பேகத்தை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.