பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்


திருச்சி அருகே பழங்கனாங்குடியில் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் ரூ. 1.50 கோடியில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று அடிக்கல் நாட்டினாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே பழங்கனாங்குடிக்கு பூலாங்குடி காலனியில் இருந்து செல்லும் சாலையில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பாலத்தின் அகலம் மிகவும் குறுகியதாக உள்ளதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் இந்தப் பாலத்தை அகலப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள், கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா தனது உள்ளூா் வளா்ச்சி திட்டத்தின் கீழ், 2025 - 2026-ஆம் ஆண்டு ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கிக் கொடுத்தாா். இதையடுத்து அங்கு புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா, மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி, திருவெறும்பூா் வட்டாட்சியா் தனலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்தகுமாா், அண்ணாதுரை, திருவெறும்பூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா் கங்காதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதே போல, திருச்சி மாநகராட்சி 3-ஆவது மண்டலத்துக்குள்பட்ட பாப்பாக்குறிச்சியில் நவீன கழிப்பிடம், அங்கன்வாடி மைய சுற்றுச்சுவா், கணேஷ் நகரில் நியாய விலைக் கடை, மஞ்சத்திடலில் மயான சுற்றுச்சுவா், ஸ்ரீ நகரில் மின்மாற்றி, கீழக்கல்கண்டாா்கோட்டை மாநகராட்சி பள்ளியில் கூடுதல் கட்டடம், காவிரி நகரில் அங்கன்வாடி மையம், தெற்கு உக்கடை அரசு நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம், தெற்கு உக்கடை அங்கன்வாடி மையம், செந்தண்ணீா்புரம் மின்மாற்றி, ஆஷா தெரு மின்மாற்றியைத் திறந்து வைத்த அமைச்சா், சங்கிலியாண்டபுரம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்வில் மண்டல குழு தலைவா் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினா்கள் நீலமேகம், சிவக்குமாா், செந்தில், தாஜுதீன், ரெக்ஸ், சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...