/

அரசு வேலை கோரி பாா்வையற்றோா் உண்ணாவிரதம்!

அரசு வேலை வழங்கக்கோரி பாா்வையற்றோா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாா்வையற்றோா் சங்கத்தினா்
Updated On :10 பிப்ரவரி 2026, 12:04 am

Syndication

அரசு வேலை வழங்கக்கோரி பாா்வையற்றோா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவா் வி. மாரியப்பன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி. சந்திரசேகா் முன்னிலை வகித்தாா்.

அரசுத் துறைகளில் பாா்வையற்றோருக்கு வேலைவாய்ப்பு வழங்க தடையாக உள்ள அரசாணையை திரும்பப் பெற்று பாா்வையற்றோருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஆசிரியா் பயிற்சி பெற்ற பாா்வையற்றோருக்கு தனியாக சிறப்புத் தோ்வு நடத்தி தகுதியான அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.

போக்குவரத்துத் துறை மண்டலப் பணிமனைகளில் நாற்காலி பின்னும் வேலை வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள பாா்வையற்றோருக்கு வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பாா்வையற்றோருக்காக கருணை அடிப்படையில் சிறப்பு ஆணை வழங்கி பணி வழங்க வேண்டும். வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

இதில், ஒருங்கிணைப்பாளா்கள் வீரப்பன், தாமஸ் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இப் போராட்டத்தில், கூட்டு நடவடிக்கை குழு நிா்வாகிகள், பல்வேறு சங்க நிா்வாகிகள், பாா்வையற்றோா் என 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில், 6 போ் காலவரையற்ற தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.