/

சுபஸ்ரீயுடன் முடியட்டும்: இனி செய்ய வேண்டியது என்ன?

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தங்களது மருத்துவர் கனவும் மரணித்துவிட்டதாகக் கருதி தங்களையே மாய்த்துக்கொள்ளும் சம்பவம் திருச்சி சுபஸ்ரீயுடன் முடியட்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:16 pm

ஆர். முருகன்

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தங்களது மருத்துவர் கனவும் மரணித்துவிட்டதாகக் கருதி தங்களையே மாய்த்துக்கொள்ளும் சம்பவம் திருச்சி சுபஸ்ரீயுடன் முடியட்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேவேளையில், மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்களில் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையிலான பாடங்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
அரியலூர் அனிதா: திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்த சண்முகம் மகள் அனிதா. அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த மாணவியான அனிதா கடந்த 2017 பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1,176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5 ஆக இருந்தது. நீட் தேர்வு எழுதிய பிறகு அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் ஆகக் குறைந்தது. இதனால் விரக்தியடைந்த அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி பிரதீபா: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பெருவள்ளூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சண்முகம் மகள் பிரதீபா. கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 1,125 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவம் பயில நீட் தேர்வு கட்டாயம் என்பதால் கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி 155 மதிப்பெண் பெற்றார். இடம் கிடைக்காததால் இந்தாண்டு மீண்டும் தேர்வெழுதியதில் 39 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் விரக்தியடைந்த அவர், கடந்த திங்கள் இரவு விஷம் குடித்து உயிரிழந்தார்.
திருச்சி சுபஸ்ரீ: திருச்சியை அடுத்த உத்தமர்கோயிலைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் கண்ணன் மகள் சுபஸ்ரீ. தனியார் பயிற்சி நிறுவனத்தில் நீட் தேர்வுக்கு படிக்கு நிகழாண்டு மருத்துவக் கனவுடன் தேர்வெழுதினார். ஆனால், 24 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் விரக்தியில் தூக்கிட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
இந்த மூவரது இறப்புக்கும் நீட் தேர்வு தோல்வியே முக்கியக் காரணமாக உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தை வைத்து நடந்த அரசியலால் பல்வேறு குழப்பங்கள் நிலவின. மறுபுறம் நீட் பயிற்சி மையங்கள் புற்றீசல் போலப் பெருகி வருவாய் ஈட்டும் தொழிலாக மாறிப்போனது. இந்த அவலங்களுக்கிடையே 3 மாணவிகளின் உயிர் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இனியும் இது தொடராதிருக்கவும், தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உரிய தீர்வு காண வேண்டியது அவசியம்.
நீட் பாடத் திட்டம்: இதுதொடர்பாக, திருச்சி தேசியதொழில்நுட்பக் கழக (என்ஐடி) பேராசிரியர் எஸ். ராகவன் கூறியது:
நீட் தேர்வின் பாடத்திட்டங்களை பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்துடன் இணைத்து அதன் தரத்தை போர்க்கால அடிப்படையில் உயர்த்த வேண்டும். பயிற்சி மையங்கள் என்ற பெயரில் வர்த்தக மையங்களாக செயல்படும் நீட் பயிற்சி மையங்களுக்கு கடிவாளம் இடப்பட வேண்டும். 2 ஆண்டுகளுக்கு தனியார் பயிற்சி மையத்தில் அதிக பணம் செலுத்தி பயில முடியாதவர்களுக்கு, மேல்நிலைப் பாடத்திட்டத்திலேயே நீட் தேர்வு பாடங்கள் இருப்பதே சாலச் சிறந்ததது. இந்த விவகாரத்தில் இனியும் அரசியல் பாராமல் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தேவை 3 ஆண்டு: மேல்நிலைக் கல்விக்கான புதிய பாடத் திட்டத்தை வடிவமைத்த குழுவில் இடம் பெற்றிருந்த உறுப்பினரும், பேராசிரியருமான சௌந்தர மகாதேவன் கூறியது:
நீட் தேர்வை மட்டுமே மையப்படுத்தி மேல்நிலைப் பள்ளி பாடத் திட்டத்தை வடிவமைக்க முடியாது. ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தால் அவர்களில் 5 முதல் 10 மாணவர்கள் மட்டுமே மருத்துவராக விரும்புவர். முந்தைய கல்விமுறை மனனம் சார்ந்து இருந்தது. இப்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய பாடத் திட்டம் திறன் சார்ந்தது, சிந்தனை சார்ந்தது. நீட் தேர்வு மட்டுமன்றி அனைத்து வகை போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையிலான நேரடி வினாக்கள், டுவிஸ்ட் வினாக்கள், சுய கற்றல், குவார்ட் கோட் (கணினியில் நுழைந்து கற்றல்), பாடங்களை புரிந்து கற்றல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும், நீட் மட்டுமன்றி ஐஏஎஸ் வரையிலான அனைத்து வகை போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளுவதற்கான விழிப்புணர்வு, ஆலோசனைகள் அடங்கிய பாடத்திட்டமும் உள்ளது. நிகழ் கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பிளஸ் 2-க்கு அறிமுகமாகும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வு உள்பட அனைத்திலும் எளிதில் வெற்றி பெறும் நிலை உருவாகும். கல்விப் புரட்சிக்கு வித்திடும் வகையிலான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியது:
நீட் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் சூட்சுமம் பலருக்கும் தெரியாததால் குறைந்த மதிப்பெண் பெற நேரிடுகிறது. மேலும், பயிற்சி நிறுவனங்களில் சேரவும், தேர்வுக்குத் தயாராகவும் மாணவர்களது சமூகப், பொருளாதாரச் சூழல் இடம் அளிக்க வேண்டும். மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர் மருத்துவம்தான் செல்ல வேண்டும் என்றில்லை. மருத்துவத்துக்கு அடுத்தபடியாக பல்வேறு துறைகள் உள்ளன. எனவே, மேல்நிலைக்கல்வி என்பதை மருத்துவம் சார்ந்து மையப்படுத்த முடியாது. தரமான மருத்துவர் வேண்டுமெனில் மருத்துவக் கல்லூரிகளில் கற்றல், கற்பித்தல் முறையை மேம்படுத்த வேண்டும்.
தரமான மருத்துவர் என்பதற்காக நீட் தேர்வை திணிப்பது நியாயமற்றது என்றார்.
தோல்வியை ஏற்கும் மனம் வேண்டும்
திருச்சியைச் சேர்ந்த மருத்துவ உளவியல் நிபுணர் டி. ரந்தீப் ராஜ்குமார் கூறியது:
இன்றைய இளம் தலைமுறையினரிடையே ஆளுமைக் குறைபாடு அதிகம் உள்ளது. தோல்வியை ஏற்றுக் கொள்வதில்லை. சமூகச்சூழல், குடும்பச் சூழல் தரும் அழுத்தத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இந்த மூன்று காரணிகளும் தற்கொலைக்கான எண்ணத்தை அதிகரிப்பதாக உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. தோல்விதான் வெற்றிக்கான முதல்படி என்பதை ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் கற்றுத்தர வேண்டும். இதற்கு மேலாக கல்வி அமைப்பு முறை மாற வேண்டும். ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி முறை வேண்டும். குடும்பமும், சமூகமும் இளம் தலைமுறையை பக்குவப்படுத்த வேண்டும். தோல்வியை ஏற்கும் மனப்பக்குவத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.