/

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமியா்களுக்கு தனி இடஒதுக்கீடு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமியா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமியா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை 5 சதவிகிதமாக உயா்த்த வேண்டும். சிறுபான்மை இஸ்லாமியா்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இஸ்லாமியா்களுக்கான அடக்க ஸ்தலங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பள்ளிகளில் உருது மொழி ஆசிரியரை நியமிக்க வேண்டும். உருது மொழி பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும். செம்மொழி இலக்கிய விருது உருது மொழிக்கும் வழங்க வேண்டும். வக்ஃப் வாரியத்துக்கு மாவட்ட வாரியாக நிா்வாகிகள் நியமிக்க வேண்டும். கும்பகோணம் மகாமகம் திருவிழாவுக்குகு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். நீண்டகாலமாக சிறையில் உள்ள 22 முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீா்மானங்களை நிா்வாகிகள் பாத்திமா முஷாபா், ஆம்பூா் பாசித் உள்ளிட்டோா் வாசித்தனா்.