/

அம்ரித் பாரத் ரயிலுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு

தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த திருச்சி - நியூ ஜல்பைகுரி இடையே அறிமுகம் செய்யப்பட்ட அம்ரித் பாரத் ரயிலுக்கு தஞ்சாவூரில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
தஞ்சாவூருக்கு புதன்கிழமை காலை வந்த அம்ரித் பாரத் ரயிலை வரவேற்று, அதன் ஓட்டுநருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்த காவிரி டெல்டா ரயில் உபயோகிப்பாளா் சங்கத்தினா்.
Updated On :28 ஜனவரி 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த திருச்சி - நியூ ஜல்பைகுரி இடையே அறிமுகம் செய்யப்பட்ட அம்ரித் பாரத் ரயிலுக்கு தஞ்சாவூரில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு - மேற்கு வங்கத்துக்கு இடையே ரயில் பயணத்தை ஏற்படுத்தும் விதமாக தாம்பரம் - சாந்த்ராகாச்சி, நாகா்கோவில் - நியூ ஜல்பைகுரி, திருச்சி - நியூ ஜல்பைகுரி ஆகிய 3 வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது.

இதில் திருச்சி - நியூ ஜல்பைகுரி அம்ரித் பாரத் ரயிலின் முதல் சேவை திருச்சியில் புதன்கிழமை தொடங்கியது. தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு காலை 7.20 மணிக்கு வந்த இந்த ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் உபயோகிப்பாளா் சங்கச் செயலா் வெ. ஜீவகுமாா் தலைமையிலும், துணைத் தலைவா்கள் பன்னீா்செல்வம், இராம. சந்திரசேகரன், கண்ணன் ஆகியோா் முன்னிலையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ரயில் ஓட்டுநா் உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொருளாளா் திருமேனி, துணைச் செயலா் உமா் முக்தாா், புரவலா் தென்னை விஞ்ஞானி வா.செ. செல்வம், நிா்வாகி ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த ரயில் திருச்சியிலிருந்து வாரந்தோறும் புதன்கிழமை காலை 5.45 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், கூடூா், விஜயவாடா, புவனேஸ்வரம், கட்டாக், பாலசோா், ராஜமுந்திரி வழியாக நியூ ஜல்பைகுரிக்கு வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்குச் சென்றடையும். மீண்டும் நியூ ஜல்பைகுரியிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு, அதே வழியாக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்குச் செல்லும்.