என் வகுப்புத்தோழி ராமலட்சுமிக்கு இரண்டு பாட்டிகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் மாதவிடாய்க்குத் தனியாக சானிடரி நாப்கின்கள் மட்டுமல்ல தனியாக கிழிசல் துணி கூடக் கிடையாது என்பார்கள். இந்த இரண்டு பாட்டிகளும் கடுமையான உழைப்பாளிகள். அவர்கள் வயலுக்குச் சென்று உழைக்காத நாட்கள் என்பதே இல்லை. ஞாயிறு விடுமுறை கிடையாது, பொங்கல், தீபாவளி விடுமுறைகள் கூட எடுத்துக்கொள்ள விரும்பாத பிறவிகள் அவர்கள். அப்போதும் ஆளரவற்ற காட்டில் தன்னந்தனியே களைபறித்துக் கொண்டோ, கிணற்றுத் தண்ணீரை மடை மாற்றிக் கொண்டோ இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை எட்டுகெஜப்புடவையின் முந்தானை தான் சானிடரி நாப்கின். அப்படி இரண்டு புடவைகள் மட்டுமே வைத்திருப்பார்கள். அதையே மாற்றி மாற்றித் துவைத்து உலர்த்தி உடுத்துக் கொள்வார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ரத்தக்கறை படிந்த துணியை ஒருமுறை துவைத்து உலர்த்தினாலே அது கிட்டத்தட்ட சடசடவென கடினமானதாக மாறிவிடும். இதில் மீண்டும் மீண்டும் துவைத்து உலர்த்திய துணி என்றால் அது கிட்டத்தட்ட கூர்மையான பிளேடுக்கு இணையாக உறுத்தல் தரக்கூடும். அப்படியும் அந்தப் பெண்மணிகள் அதை சகித்துக் கொண்டு அதையே பயன்படுத்தி பல காலம் வாழ்ந்தார்கள். இவற்றுக்கு நடுவில் மாதா மாதாம் வீட்டு விலக்காகி நிற்கையில் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டு இரவுகளில் நெல் அள்ளும் சாக்குகளை விரித்துப் படுப்பது, பெருச்சாளிகளும், கரப்பான்களும் ஒளிந்து விளையாடும் வீட்டின் இருட்டு மூலைகளை அந்த நாட்களுக்கே நாட்களுக்கென்று ஸ்பெஷலாக ரிசர்வ் செய்து வைத்துக் கொண்டு வாழ்வது. இப்படிப் பல சித்தரவதைகளை அனயாசமாகக் கடந்து வந்தார்கள். இருவருக்கும் உடல் வலுவும் மன வலுவும் அதிகமென்பதால் 80 வயது தாண்டி வாழ்ந்து மறைந்தார்கள்.