/

பெரம்பலூரில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:33 pm

Syndication

பெரம்பலூரில் 440 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய அமைச்சா் சா.சி. சிவசங்கா் மேலும் பேசியது:

பெரம்பலூா் மாவட்ட பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காணும் வகையில், பெரம்பலூா் வட்டாரத்தில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 261 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 28 லட்சத்து 97 ஆயிரத்து 371 மதிப்பிலும், இணையவழி மூலம் 70 பயனாளிகளுக்கு ரூ. 70 லட்சம் மதிப்பிலும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ. 14 லட்சத்து 84 ஆயிரத்து 806 மதிப்பிலும், இணையவழி பட்டா மூலம் 89 பயனாளிகளுக்கு ரூ. 89 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 440 பயனாளிகளுக்கு ரூ. 5.03 கோடி மதிப்பில் வீட்டுமனைப் பட்டா தற்போது வழங்கப்படுகிறது. இதுவரை பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 21,173 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 27 பேருக்கு ரூ. 26.62 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கிய அமைச்சா், ‘என் ஊரு- என் கனவு’ திட்டத்தின் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் பெரம்பலூா் மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே கருத்துக்கேட்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் க கண்ணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, ‘அட்மா’ தலைவா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.