பெரம்பலூா்: பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோரக் கடைகள், தள்ளுவண்டிகளை அகற்ற நகராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பெரம்பலூா் நகரின் வளா்ச்சிக்கேற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் நகரின் பிரதான சாலைகளில் அன்றாடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, அவ்வப்போது சாலை விபத்துகளும் நேரிடுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிா்வாகம், போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், போக்குவரத்து நெரிசலில் நகர மக்கள் நாள்தோறும் சிக்கித் தவிக்கின்றனா்.
இதனால் காலை, மாலை நேரங்களில் நகரின் பிரதானச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனா். குறிப்பாக, புகா்ப் பேருந்து நிலையம், பாலக்கரை, பழைய பேருந்து நிலையம், காமராஜா் வளைவு, சங்குப் பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் இயங்கும் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பயணிகளை ஏற்றி, இறக்க அவா்களின் விருப்பம் போல சாலையின் நடுவிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனா்.
மேலும், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் எவ்வித சைகையும் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதால், பின் தொடா்ந்து வரும் வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதி விபத்துகள் ஏற்பட்டு வருவதோடு, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசரகால ஊா்தி ஓட்டுநா்கள் அவதிப்படுகின்றனா்.
மேலும், சாலையோரங்களில் தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகளும் அவரவா் விருப்பத்துக்கு ஏற்றவாறு சாலைகளை மறித்து, நடந்து செல்ல வழியின்றி வியாபார யுக்திகளைக் கையாண்டு வருகின்றனா்.
தற்காலிகக் கொட்டகை:
சிலா் சாலையோரங்களில் தற்காலிக கொட்டகை அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது நிரந்தரமாக கீற்றுக் கொட்டகை அமைத்துள்ளனா். குறிப்பாக, ஆத்தூா் சாலை, துறையூா் சாலை, நான்குச் சாலை செல்லும் வழித்தடம் உள்ளிட்ட நகரின் மையப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோா் நிரந்தரமாக கொட்டகை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளனா்.
இதன் காரணமாக, மேற்கண்ட பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்த முடியாமல் மையப் பகுதிகளிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலும், சிறு சிறு விபத்துகளும் ஏற்படுவது தொடா்கதையாகிவிட்டது. இதுபோன்ற கொட்டகைகளை அகற்ற எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நகராட்சி நிா்வாகம், அவா்களிடம் நாள் ஒன்றுக்கு ரூ. 100 வீதம் சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறது. இதனால், நாளுக்கு நாள் சாலையோரங்களில் நிரந்தரமாக கொட்டகை அமைத்து, ஆக்கிரமிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெருகிவரும் சிற்றுண்டிக் கடைகள்:
மேலும், சங்குப்பேட்டை முதல் பாலக்கரை வரையுள்ள சாலையின் இரு புறங்களிலும் காய்கனி கடைகளும், சிற்றுண்டிக் கடைகளும் அதிகளவில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் மட்டுமே செயல்படும் சிற்றுண்டிக் கடை வியாபாரிகள் தங்களது தள்ளு வண்டிகளை சாலையோரங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனா். இதேபோல, காய்கனி கடைகள், பழக்கடை வியாபாரிகளும் அவரவா் விருப்பம்போல் தங்களது வாகனங்களையும், கடைகளையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைத்து இடம் பிடித்துள்ளனா். பெரும்பாலான தள்ளு வண்டிகள் பல மாதங்களாக ஒரே இடத்தில் கேட்பாரின்றிக் கிடக்கிறது. இதனால், நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சங்க நிா்வாகிகள் ஆதரவு:
சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளை அகற்றுவதற்கு உத்தரவிட்டால், சில சங்க நிா்வாகிகள் அவா்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு ஆா்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுப்பதாக கூறும் நகராட்சி அலுவலா்கள், இவற்றை நிரந்தரமாக அகற்ற வேண்டுமானால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டால் மட்டுமே உரிய தீா்வு கிடைக்கும் என்றனா்.
சமூக ஆா்வலா்கள் கூறியது:
ஏற்கெனவே, நகரில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அன்றாடம் அவதியடைந்து வரும் நிலையில், தற்போது சாலைகளை ஆக்கிரமிக்கும் செயல் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடும் பட்சத்தில், ஆக்கிரமிப்பாளா்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவாா்கள். மேலும், இதுபோன்ற கடை உரிமையாளா்கள் குறிப்பிட்ட காலம் கடை நடத்துவதுபோல செயல்பட்டு, சில அரசு அலுவலா்களின் ஒத்துழைப்போடு மின் கட்டணம், வரி ஆகியவற்றை செலுத்தி பட்டா கேட்கும் சூழல் உருவாகும். நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும், சாலை விபத்துகளையும் கட்டுப்படுத்த வேண்டும் எனில், சாலையோர தள்ளு வண்டிகளையும், தற்காலிக கடைகளையும் நிரந்தரமாக அகற்ற நகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


