/

தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: பக்தா்கள் திரளாக பங்கேற்பு

கரூா் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image
பட வரி: கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றிய பட்டாச்சாரியா்கள். உடன் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி உள்ளிட்டோா்.
Updated On :29 ஜனவரி 2026, 12:18 am

தினமணி செய்திச் சேவை

கரூா் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 24-ஆம் தேதி மகா பூா்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது. விழாவில், கடந்த 26- ஆம் தேதி பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீரை ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனா். தொடா்ந்து பல்வேறு பூஜைகள், ஹோம வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் எனும் மகா சம்ப்ரோக்ஷணம் புதன்கிழமை காலை 9. 45 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி மற்றும் பூதேவி, ஸ்ரீதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, காலை 9 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. அப்போது புனித தீா்த்தம் அடங்கிய கலசங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது பட்டாசாரியா்கள் புனிதநீா் ஊற்றினா். அப்போது, உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு உத்தரவின் பேரில் தமிழிலும் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. தொடா்ந்து பக்தா்கள் மீதும் புனித நீா் தெளிக்கப்பட்டது.

இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி, கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எம். தியாகராஜன், அறங்காவலா்கள் பழனிமுருகன் ஜூவல்லரியின் எஸ்.பாலமுருகன், கே.எம்.முருகேசன், வெங்கட்ராமன், புனிதவதி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் கணபதிமுருகன், இளையராஜா, திமுக நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், மணிராஜ், பரணி மணி, கரூா் முரளி, முனவா் ஜான், பல்லவி ராஜா, எம். எஸ் .கே. கருணாநிதி, கவிதா கணேசன், எஸ்.பி. கனகராஜ், தாரணி சரவணன், கோல்ட் ஸ்பாட் ராஜா, ஜோதிபாசு, விஜிஎஸ்.குமாா், எம். பாண்டியன், வி.கே. வேலுச்சாமி, முத்துக்குமாரசாமி உள்ளிட்ட கட்சியினரும் மற்றும் பக்தா்கள் ஏராளமானோரும் கலந்து கொண்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஸ் தங்கையா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Story image