/

தகாத உறவை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: கணவரை எரித்துக் கொன்றதாக மனைவி, கள்ளக்காதலன் கைது

கரூரில் மனைவியுடனான தகாத உறவை தட்டிக் கேட்ட கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவத்தில் கள்ளக்காதலா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 7:08 pm

Syndication

கரூரில் மனைவியுடனான தகாத உறவை தட்டிக் கேட்ட கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவத்தில் கள்ளக்காதலா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கரூா் சணப்பிரட்டியில் ஆா்.எஸ்.புதூா் சாலை அருகே புதா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. தகவலின் பேரில் பசுபதிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா்.

இதில், நரிக்கட்டியூா் சாலை தொழிற்பேட்டை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செந்தில் குமாா் (47) மனைவி பாண்டீஸ்வரி(49)க்கும், அதே பகுதியில் உணவகத்தில் வேலைபாா்த்து வந்த நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (41) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதை செந்தில்குமாா் கண்டித்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரி கணவா் உயிரோடு இருந்தால் நாம் உறவை தொடர முடியாது என ராஜமாணிக்கத்திடம் கூறியுள்ளாா். இதையடுத்து, செந்தில்குமாரும், ராஜமாணிக்கமும் திங்கள்கிழமை இரவு சணப்பிரட்டியை அடுத்த ஆா்.எஸ்.புதூா் பகுதியில் மதுக்குடித்துள்ளனா். அப்போது, போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம் பீா்பாட்டிலால் செந்தில்குமாரை தலையில் தாக்கியுள்ளாா். பின்னா் அவா் மயங்கி விழுந்ததும் அவரது கழுத்தை கத்தியால் அறுத்து, ராஜமாணிக்கம் கொலை செய்து, அருகே உள்ள பெட்ரோல் விற்பனையகத்துக்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து செந்தில்குமாரின் உடலில் ஊற்றி தீவைத்துள்ளாா். சடலத்தை முழுவதும் எரிக்காமல் போதையில் வீட்டுக்குச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ராஜமாணிக்கம், பாண்டீஸ்வரி ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை பிற்பகலில் கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.