/

செய்தியாளா் தாக்கப்பட்ட சம்பவம் - திமுக எம்.எல்.ஏ., அவரது மகன் உள்பட 3 போ் கரூா் நீதிமன்றத்தில் சரண்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 12:10 am

Syndication

குளித்தலை அருகே கல்குவாரியை படம் எடுக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளா் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி, அவரது மகன் உள்பட 3 போ் கரூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சிவாயம் வடக்கு கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் வீதிமீறல் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் கதிரவன், ஒளிப்பதிவாளா் எஸ்.செபாஸ்டியன், சுடலைக்கண்ணு மற்றும் வழக்குரைஞா் திருமலைராஜா, அவரது உதவியாளா் ராஜமாணிக்கம் ஆகியோா் ஜன. 30-ஆம்தேதி குவாரி பகுதிக்குச் சென்று, ட்ரோன் மூலம் விடியோ எடுத்தனா்.

அப்போது, குவாரி பணியாளா்கள் செல்வம், மணிவேல், முருகேசன் ஆகியோருக்கும், கதிரவன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக குளித்தலை காவல்நிலையத்தில் குவாரி நிா்வாகம் சாா்பில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பழனியாண்டி(திமுக) மற்றும் அவரது மகன் விமலாதித்தன் தரப்பிலும், செய்தியாளா் கதிரவன் தரப்பிலும் புகாா் அளிக்கப்பட்டது.

இருதரப்பு புகாா் மனுவை பெற்றுக்கொண்ட குளித்தலை போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதையடுத்து பிப். 5-ஆம்தேதி, விமலாதித்தன் அளித்த புகாரின்பேரில் குவாரிக்குள் அத்துமீறி நுழைதல் 329(4), தட்டிக்கேட்ட தங்களை தாக்கியது 115(2), கொலை மிரட்டல் விடுத்தது 351(2) ஆகிய பிரிவுகளின் கீழும், செய்தியாளா் கதிரவன் அளித்த புகாரின்பேரில், செய்தி சேகரிக்கச் சென்றவா்களை எம்.எல்.ஏ. பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன் மற்றும் சிலா் அவதூறாக பேசி, மிரட்டி தாக்கியது 115(2), கொலை மிரட்டல் விடுத்தது 351(2) ஆகிய பிரிவுகளின் கீழும் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Story image

இந்நிலையில், வியாழக்கிழமை காலை சட்டப்பேரவை உறுப்பினா்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான கரூா் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1-இல் நீதிபதி பரத்குமாா் முன்னிலையில் எம்.எல்.ஏ பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன், உறவினா் பரமசிவம் ஆகியோா் சரணடைந்தனா். பின்னா் மூவரும் நீதிபதியிடம் பிணை உத்தரவாதம் வழங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றனா்.