இந்திய அரசியல் வரலாற்றில் இடம்பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை, மக்களவைக்கு அனுப்பிய பெருமை பெரம்பலூர் தொகுதிக்கு உண்டு. 1951 ஆம் ஆண்டு பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்படி, 1951- இல் பூவராகசாமி படையாச்சி (டி.என்.டி), 1957- இல் பழனியாண்டி (காங்கிரஸ்), 1962- இல் இரா. செழியன் (திமுக), 1967- இல் ஏ. துரைராசு (திமுக), 1971- இல் ஏ. துரைராசு (திமுக), 1977- இல் அ. அசோக்ராஜ் (அதிமுக), 1980- இல் கே.பி.எஸ். மணி (காங்கிரஸ்), 1984- இல் எஸ். தங்கராஜு (அதிமுக), 1989- இல் அ. அசோக்ராஜ் (அதிமுக), 1991- இல் அ. அசோக்ராஜ் (அதிமுக), 1996- இல் ஆ. ராசா (திமுக), 1998- இல் ப. ராஜரத்தினம் (அதிமுக), 1999- இல் ஆ. ராசா (திமுக) 2004- இல் ஆ. ராசா (திமுக), 2009- இல் து. நெப்போலியன் (திமுக), 2014-இல் ஆர்.பி. மருதராஜா (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி 16 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில், திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், டி.என்.டி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2004 மக்களவை தேர்தல் வரை உப்பிலியபுரம் (தனி), பெரம்பலூர் (தனி), வரகூர் (தனி), அரியலூர், ஆண்டிமடம், ஜயங்கொண்டம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் பெரம்பலூர் (தனி) மக்களவை தொகுதியில் இடம்பெற்றிருந்தன.
தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு கடந்த 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்த வரகூர் சட்டப்பேரவைத் தொகுதி கலைக்கப்பட்டு, குன்னம் சட்டப்பேரவை தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அரியலூர் மாவட்டத்திலிருந்த செந்துறை வட்டம், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் இணைக்கப்பட்டது. தற்போதுள்ள பெரம்பலூர் (பொது) மக்களவைத் தொகுதியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி), லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த குளித்தலை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இத்தொகுதியில், 2019 உத்தேச கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 18,91,708 பேர். இதில் 6,72,146 ஆண் வாக்காளர்களும், 7,04,273 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 80 பேர் என மொத்தம் 13,76,499 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 32,127 பேர் அதிகமாக உள்ளனர். இத்தொகுதியில் 1,644 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக அளவில் முத்தரையர் சமூகத்தினரும், லால்குடி, துறையூர், பெரம்பலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உடையார், தாழ்த்தப்பட்டோர், ரெட்டியார் சமூகத்தினரும், கோனார், முஸ்லிம், கிறிஸ்தவர்களும் கணிசமாக உள்ளனர்.
வேட்பாளர்கள்: இத்தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் மாநில அமைச்சர் என்.ஆர். சிவபதி போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டி.ஆர். பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்திலும், அமமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராஜசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இரா. முத்துலட்சுமி, நாம் தமிழர் கட்சி சார்பில் கே. சாந்தி உள்பட 2 பெண் வேட்பாளர்களும், 17 ஆண் வேட்பாளர்களும் என மொத்தம் 19 பேர் களத்தில் உள்ளனர்.
தொகுதி நிலவரம்: பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட லால்குடி, துறையூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் திமுக வசமும், பெரம்பலூர், மண்ணச்சநல்லூர், குளித்தலை முசிறி ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளது. கடந்த 2014 ஆம் மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை இத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா 4,62,693 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் டி.ஆர். பச்சமுத்து, மா. ராஜசேகரன் ஆகியோர் போட்டியிட்டுள்ளதால், இத் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவர்கள். அதேபோல, அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதியும் பெரம்பலூர், துறையூர் தொகுதிகளை தவிர, இதர நான்கு சட்டப்பேரவை தொகுதி வாக்காளர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.
அதிமுக, அமமுக வேட்பாளர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த சமூகத்தினரின் வாக்குகள் சிதறும். இது திமுகவுக்கு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், கிராமப்புற வாக்காளர்களே அதிகளவில் உள்ளனர்.
திமுகவை பொருத்தவரை பெரம்பலூர் தொகுதி திமுக-வின் கோட்டையாகவே திகழ்கிறது. கடந்த 1984 முதல் 1996 வரை அதிமுக வசம் இருந்த பெரம்பலூர் தொகுதியை, கடந்த 1996ல் நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 2014 வரை தொடர்ந்து திமுக தன் வசமாக்கிக் கொண்டது.
திமுகவும், அதிமுகவும் நேரடியாக 13 தேர்தலில் போட்டியிட்டுள்ளது. கடந்த 2014-இல் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா இல்லாததால், திமுகவிடமிருந்த இத்தொகுதியை அதிமுக கைப்பற்றியது.
அமமுக வேட்பாளர் எம். ராஜசேகரன், ஒன்றிரண்டு தொகுதிகளை தவிர, இதர தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் என்பதாலும், முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அதிக வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. இது, அதிமுக வேட்பாளருக்கு பலவீனத்தை ஏற்படுத்தலாம். நாம் தமிழர் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. அதேபோல, சுயேச்சை வேட்பாளர்களும் அந்தந்தப் பகுதிகளில் வாக்குகளைப் பெறுவார்கள். பெரம்பலூர் மக்களவைத் தொகுதியை பொருத்தவரை விவசாயிகளே அதிகளவில் உள்ளனர். வறட்சியால் பருத்தி, படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காதது, அதிகளவில் மகசூல் கிடைத்தும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். இது, திமுகவுக்கு சாதகமாக அமையும்.
இழந்த தொகுதியை மீட்க வேண்டுமென திமுகவினரும், தன்வசமுள்ள தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென அதிமுகவும், இத்தொகுதியில் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென அமமுகவும் முனைப்புடன் தேர்தல் களத்தில் உள்ளன. திமுக, அதிமுக, அமமுக சரிசமப் போட்டியில் உள்ளதால், கடைசி நேர பிரசார உத்தியே மாற்றத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாள் கோரிக்கைகள்
பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான ரயில் போக்குவரத்துச் சேவையை கொண்டுவர வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து 3,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். பெரம்பலூரில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வேப்பந்தட்டை பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரவேண்டும். விவசாயிகளின் 75 ஆண்டுகால கோரிக்கையான சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சின்ன வெங்காய குளிர்பதன கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
மண்ணச்சநல்லூர், குளித்தலை, முசிறி ஆகிய பகுதிகளில் கோரை புல்லைக் கொண்டு பாய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். துறையூரை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும். துறையூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். இத்தொகுதிக்குள்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். மலர் சாகுபடி அதிகரித்து வருவதால், வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்னைகள் விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஸ்ரீகிருஷ்ணா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா!

அரசியலில் உண்மையான வெற்றி மக்களுக்குச் சொந்தமானது: விஜேந்தா் குப்தா

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

