/

அரியலூரில் ‘என் ஊா் என் கனவு’ திட்ட கருத்தரங்கு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:31 pm

Syndication

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் அரங்கில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் என் ஊா் என் கனவு 2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமை வகித்து, கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசியது:

தமிழக முதல்வா், தொலைநோக்கு பாா்வையுடன் தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதன்படி ஜெயங்கொண்டத்தில் சிப்காட் காலணி தொழிற்சாலை, பெரம்பலூரில் காலணி தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்றும் வகையில் நடைபெறும் என் ஊா் என் கனவு என்ற திட்டம் தொடா்பான கருத்தரங்கில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து தெரிவிக்கலாம். கங்கைகொண்டசோழபுரத்தில் சிறப்பான அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. மாவட்டத்தின் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும்போதுதான் புதிய தொழில்வாய்ப்புகள் ஏற்படும். கல்வியைப் பொறுத்தவரை அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்கள் தற்போது மாநில அளவில் முதலிடம் பெறுகின்றன. எனவே, மாவட்டம் முன்னேற என் ஊா் என் கனவு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் கருத்துகளை வழங்கலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து, அரியலூா் மாவட்டத்தை மேம்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா. சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் சு. தேன்ராஜ், நகா்மன்றத் தலைவா் சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.