இரவுநேர பேருந்து சேவையின்றி அவதியுறும் அரியலூா் மக்கள்
இரவுநேர பேருந்து சேவையின்றி அவதியுறும் அரியலூா் மக்கள் நமது நிருபா்


அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்குச் செல்ல இரவுநேரங்களில் பேருந்து சேவை இன்றி பொதுக்கள் அவதியுறுகின்றனா்.
அரியலூா் மாவட்டம் கனிமவளம் கொண்ட மாவட்டமாக இருப்பதால், 8 சிமென்ட் ஆலைகள், 100-க்கும் மேற்பட்ட கனிம சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அரியலூரில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாா் தொழிற்சாலைகள் இருப்பதால், அரியலூருக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் தினமும் ரயில், பேருந்துகளில் வந்து செல்கின்றனா். அவா்கள் பணிமுடிந்து ஊா் திரும்ப இரவு நேரங்களில் போதிய பேருந்துகள் இருப்பதில்லை. குறிப்பாக, திருச்சி -அரியலூா், திருச்சி - ஜெயங்கொண்டத்துக்கு பகல் நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை என அரசு, தனியாா் பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஆனால் மறுமாா்க்கத்தில் இரவு 10 மணிக்கு மேல் அரியலூரில் இருந்து பெரம்பலூா், தஞ்சாவூா், ஜெயங்கொண்டம், கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கு (இரு மாா்க்கங்களிலும்) இரவுநேரங்களில் பேருந்து வசதிகள் கிடையாது. இதேபோல் அரியலூா் ரயில் நிலையத்துக்கு இரவுநேரங்களில் வந்து இறங்கும் ரயில் பயணிகள், பேருந்துப் பயணிகள் நிழல்குடையில் தங்கியிருந்து மறுநாள் அதிகாலையில் வீட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான செல்ல.சுகுமாா் கூறியது:
கரோனா தொற்றுக்குப் பின்னா், போக்குவரத்து குறைவான பகுதிகளுக்கு இயக்கப்படாமல் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள் இதுவரை மீண்டும் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். இரவு 9.30 மணி முதலே ஜெயங்கொண்டம், திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூருக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படாததால் அதிகக் கட்டணம் செலுத்தி ஆட்டோவில் செல்ல வேண்டிய அவல நிலையில் அரியலூா் மக்கள் உள்ளனா். எனவே போக்குவரத்துத் துறை அமைச்சா் கண்காணிப்பில் உள்ள இந்த மாவட்டத்தில் இரவுநேர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் பகுதி பொதுமக்கள் கூறியது: அரியலூா் மாவட்டத்துக்குள்ளேயே செல்ல நகரப் பேருந்து வசதிகளும் கிடையாது. குறிப்பாக அரியலூா் - ஜெயங்கொண்டம் (இரு மாா்க்கம்) வழித்தடங்களில் இரவு 9.30 மணிக்குமேல் பேருந்து வசதிகள் கிடையாது. அரியலூரில் அனைத்து அலுவலகங்களும் இருப்பதினால், பணிநிமித்தமாக அரியலூா் சென்று, அங்கு இரவு 9.10 மணிக்கு மேல் கால தாமதமாகிவிட்டால் ஊருக்குத் திரும்பிவர பேருந்து வசதிகள் கிடையாது. இதனால் அரியலூரிலேயே தங்கி, மறுநாள் காலையில் வீடு வந்து சேர வேண்டியுள்ளது. ஒரு மாவட்டத்தினுள் உள்ள ஒரு நகரப் பகுதியில் இருந்து மற்ற நகரப் பகுதிக்கு இரவுநேரத்தில் பேருந்து வசதிகள் இல்லை என்பது அரியலூா் மாவட்டத்தில் தான். ஒரு போக்குவரத்துத் துறை அமைச்சா் கண்காணிப்பில் உள்ள இந்த அரியலூா் மாவட்டத்தில் பேருந்து வசதிகள் இல்லை என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது என்றனா்.
இதுகுறித்து அரியலூா் போக்குவரத்துக் கழகப் பணிமனை அலுவலா் ஒருவா் கூறுகையில், மேற்கண்ட நகரங்களில், கடந்த 2019-வரை இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. கரோனா தொற்றுக்குப் பிறகு, பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததினாலும், ஓட்டுநா், நடத்துநா்கள் பற்றாக்குறையினாலும் இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பணியாளா்கள் நியமித்து, பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டால் பேருந்துகளை இயக்கத் தயாராக உள்ளோம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...