/

புதுவாழ்வுத் திட்டம் -2 விரைவில் செயலாக்கப்படுமா?

தமிழகத்தில் மகளிர் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வந்த புதுவாழ்வுத் திட்டம் மீண்டும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:18 pm

சி.சண்முகவேல்

தமிழகத்தில் மகளிர் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வந்த புதுவாழ்வுத் திட்டம் மீண்டும் தொடங்கப்படுமா என கிராமப்புற மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்த திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
திட்டம் ஏன்? தமிழக கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குள் கீழ் உள்ள நலிவுற்ற பிரிவினரைத் தெரிவு செய்து, அவர்களின் வறுமையைப் போக்கக் கொண்டு வரப்பட்டதே இத்திட்டம். பொதுவாக இத்திட்டம் 12 ஆண்டுகள் அமலில் இருக்கும். திருச்சி, சென்னை போன்ற பெருநகரங்கள் இத்திட்டத்தின்கீழ் வராது.
உலக வங்கி உதவி: கடந்த 15.11.2005 அன்று நடைமுறைக்கு வந்த இந்தத் திட்டத்துக்காக உலக வங்கி ரூ.1,665 கோடி கடனுதவி வழங்கியது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் இத்திட்டம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. மாநில அளவில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை திட்ட அலுவலராகக் கொண்டு செயல்பட்டு வந்தது.
பின்தங்கிய மாவட்டங்களான கடலூர், ராமநாதபுரம், அரியலூர்,விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டு படிப்படியாக 26 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இந்தப் புதுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கடனுடன் தொழில் பயிற்சி: இத்திட்டத்தை செயல்படுத்த கிராமங்களில் இரண்டு வித அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஒன்று, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் (விபிஆர்சி). மற்றொன்று ஊராட்சிகள் அளவிலான கூட்டமைப்பு (பிஎல்எஃப்). இத்திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு,அவர்களுக்கு வங்கிகள் மூலம் தனிநபர் கடன் உதவி மட்டுமல்லாது கணினிப் பயிற்சி,தையல் பயிற்சி,ஓட்டுநர் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. 35 வயதுக்குள்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. ஊராட்சிகள் அளவிலான கூட்டமைப்பு மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் வாயிலாக கடனுதவி வழங்கப்பட்டது.
சிறப்பான செயல்பாடு: ஒவ்வொரு கூட்டமைப்புக்கும் அதிகபட்சமாக ரூ. 12 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டது. இந்த நிதி நடவடிக்கைகள் அனைத்துமே வங்கிக் கணக்குகள் மூலமே நடைபெற்று வந்ததால் முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.
இத்திட்டத்தைப் பார்த்தே பல மைக்ரோ பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு மகளிர் சுய உதவிகளுக்கு கடனுதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், இந்தப் புதுவாழ்வுத் திட்டம் கடந்த 30.6.2017 முடிவுக்கு வந்தது. இதனால் அந்தத் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
இந்தத் திட்டம் தொடங்கிய நோக்கமே கிராமப்புறங்களில் வறுமை போக்குவதற்காகத்தான். அந்த நோக்கம் நிறைவேறாத நிலையில் இத்திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
வாழ்வாதாரம் இழந்த ஊழியர்கள்: இதுகுறித்து புதுவாழ்வுத் திட்ட முன்னாள் மேலாளர் சுதாதேவி கூறியது:
மாநில அளவில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை திட்ட அலுவலராகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டது. இப்படி தமிழகம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினர். கடைசி 5 ஆண்டுகளில் எங்களின் பணித்திறன் மதிப்பீடு செய்யப்படவில்லை. அதனால் ஊதிய உயர்வும் வழங்கவில்லை. ஈட்டிய விடுப்பு, விடுப்பு ஒப்படைப்புக்காக 90 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும் என்றனர். ஆனால் புதுவாழ்வுத் திட்டம் முடிந்து ஓராண்டாகியும் இன்னும் அந்தத் தொகை வழங்கப்படவில்லை.
எங்கள் கோரிக்கைகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். விரைவில் புதிதாக புது வாழ்வுத் திட்டம்-2 தொடங்கப்படும். அதுவரை முந்தைய திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேறு துறைகளில் பணி வழங்கப்படும் என்று கூறினார்.
மீண்டும் பணி வழங்க வேண்டும்: இதற்கிடையே, புதுவாழ்வுத் திட்டம்-2-க்காக உலக வங்கி ரூ. 900 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.
இத் திட்டத்துக்காக புதிதாக ஆள்களை நியமிக்க தனியார் ஏஜென்சிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே இத்திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.