/

விளையாட்டில் சாதிக்கும் கிராமப்புற இளைஞர்கள்!

அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் நடவடிக்கைகளால்....

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:21 pm

சி.சண்முகவேல்

அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் நடவடிக்கைகளால் அரியலூர் மாவட்டத்தின் கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று சாதித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிட, 25 வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். இதில் குறிப்பாக, கிராமங்களில் வசிக்கும் இளைஞர், இளைஞிகளை ஊக்கப்படுத்தவும், அவர்களை அனைத்துப் போட்டிகளில் பங்கேற்க செய்திடவும் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான கிராம விளையாட்டு போட்டிக்கு மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளில், ஊராட்சிக்கு ரூ. 20,000 வீதம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது.
போட்டிகளில், கிராமப்புற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை முழுமையாக பங்கேற்க செய்து, அதில் வெற்றிப் பெறுபவர்களை மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் நடைபெறும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் அவர்களை முழுமையாக பங்கேற்க செய்து வருகிறது மாவட்ட நிர்வாகம்.
மாநில அளவிலான போட்டிகளில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா ரூ. 1 லட்சம், ரூ. 75 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் என மாவட்ட நிர்வாகம் பரிசுத் தொகை வழங்கி வருகிறது. இதனால், விளையாட்டு வீரர்களிடையே பெரிதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் அரியலூர் ஹாக்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் இருப்பவர்கள் அனைவரும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஹாக்கி வீரர்கள் க. செல்வராஜ், கு. திராஷ் ஆகியோர் கூறியது: கிராமங்களைச் சேர்ந்த எங்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதும், அதற்கான உபகரணங்களோ, மைதானங்களோ கிடையாது. இதையடுத்து, நாங்கள் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடைபெற்ற உடற்திறன் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்று, விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற்றோம்.
மாநில அளவிலான முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்து. சிறப்பாக விளையாடியதால் சாம்பியன் பட்டமும் வென்றோம்.
இதுகுறித்து ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் கூறியது:
விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள், கிராமப்புற இளைஞர்களை அடையாளம் காண்பதற்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதன்படி, விளையாட்டு மையங்கள் அமைத்தல், கட்டமைப்பு, விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை வழங்குதல், பயிற்சி முகாம் நடத்துதல், கிராமங்களில் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களை அடையாளம் காண ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அளவிலான போட்டிகளை நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
2011-2016 ஆண்டு வரை 25 வகையான விளையாட்டு போட்டிகளில் 4,07,814 பேர் பங்கேற்று பயனடைந்தனர். இதற்கு, 1 கோடியே 79 லட்சத்து 55 ஆயிரத்து 867 ரூபாய் செல்விடப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ. 75 லட்சத்தில் நீச்சல் குளம், ரூ. 20.09 லட்சத்தில் டென்னிஸ் மைதானம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 1.50 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.