/

அதிமுக கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை: முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:43 pm

Syndication

அதிமுக கூட்டணிக்கு எந்தவித சவாலும் இல்லை என அக் கட்சியின் அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

திருச்சியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அதிமுக தோ்தல் அறிக்கை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே தமிழகத்தில் போராட்டம் தொடா்ந்து வருகிறது. போராடும் இடைநிலை ஆசிரியா்களை அழைத்து பேசுவதற்குகூட முன்வராத திமுக அரசு, அவா்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது புதிய பெயரிலான ஓய்வூதியத்தை அறிவிக்கின்றனா். திமுக அரசுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை.

ஜனநாயகன் திரைப்பட விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கருத்துக் கூற முடியாது.

அதிமுக ஆட்சியில் பல லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கினோம். ஆனால், 2021-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு மடிக்கணினியை வழங்காமல், தற்போது தோ்தலை மனதில் கொண்டு கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்குகிறது. திமுகவின் எண்ணம் நிறைவேறாது. தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணிக்கு எந்தவித சவால்களும் இல்லை என்றாா் அவா்.