நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நிலுவைத் தொகை கிடைக்காமல் துப்புரவுத் தொழிலாளர்கள் அவதி

திருச்சி, ஜன. 25:  திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை தலா ரூ. 46,150 கிடைக்காமல் பல ஆண

News image
Updated On :2 ஜனவரி 2024, 3:57 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, ஜன. 25:  திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை தலா ரூ. 46,150 கிடைக்காமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.

  துப்புரவுத் தொழில் என்பதை நகரப் பகுதிகளில் "கைநிறைய ஊதியம்', "நிரந்தரப் பணி' என பல வியாக்கியானங்களில் சிலர் வர்ணிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், கிராமப்புறங்களில் இவர்களின் நிலை இன்னமும் மோசமானது.

  திருச்சி மாவட்டத்தில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும்தான் ரூ. 2,000 மாத ஊதியம். மற்ற ஊராட்சிகளில் ரூ. 1,500, ரூ. 1,300 என்ற பலவிதமான வேறுபட்ட ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு முறையும் ஊதிய உயர்வுக்கான அரசாணை வெளியிடப்படும்போதும், அவை அப்படியே "கணக்கில் வைத்துக்கொள்' என்பதைப் போல நிலுவையில் வைக்கப்பட்டுவிடுகிறது. திருச்சி மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தைப் பொருத்தவரை, பேட்டைவாய்த்தலை ஊராட்சியில் 8 தொழிலாளர்கள், குழுமணி ஊராட்சியில் 3 தொழிலாளர்கள், அந்தநல்லூர் ஊராட்சியில் 2 தொழிலாளர்கள் மற்றும் எட்டரை, கோப்பு, திருச்செந்துரை ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு தொழிலாளியும் பணிபுரிந்து வருகின்றனர்.

  இவர்களுக்கு கடந்த 1992 முதல் 2005-ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட 20 வெவ்வேறு அரசாணைகளின்படி நிலுவைத் தொகை தலா ரூ. 46,150. ஒவ்வொரு முறையும் வட்டார வளர்ச்சி அலுவலர்களைத் தொடர்பு கொண்டால், அரசாணை வரவில்லை அல்லது ஒதுக்கீடு வரவில்லை எனப் பதில் கூறப்பட்டு வருவதாகத்  தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தநல்லூர் ஊராட்சியில் பணியாற்றி வரும் அஞ்சலை, தனக்கான நிலுவைத் தொகையில் ரூ. 10 ஆயிரம் மட்டும் பெற்றுள்ளதாகவும்,  மீதியுள்ள தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்றும் கோருகிறார்.

பேட்டைவாய்த்தலை ஊராட்சியில் பணியாற்றி வரும் ரெங்கநாயகி தன்னுடன் சேர்த்து, ஊராட்சியில் பணியாற்றி வரும் 8 பேருக்கும் தலா ரூ. 46,150 நிலுவை இருப்பதாகக் கூறுகிறார். ஊராட்சி நிர்வாகத்தில் யாரும் பதில் சொல்வதே இல்லை என்கிறார் அவர்.  குழுமணி ஊராட்சியில் பணியாற்றி வரும் டி. செல்வராஜ், தனது நிலுவைத் தொகையைக் கேட்டால் அரசாணை வரவில்லை என்று அதிகாரிகள் கூறுவதாகத் தெரிவிக்கிறார்.

முதல்வர் தொகுதிக்குள்பட்ட ஒன்றியத்தில் இவ்வாறான நிலை இருப்பதை மாவட்ட நிர்வாகம் உடனே மாற்ற வேண்டும் என்கிறார் தமிழக அனைத்து உடலுழைப்புத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர், வழக்குரைஞர் பொ.ஆ. ராமசாமி.   அதேபோல, சில ஊராட்சிகளில் இவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடைகளை வழங்குவதில்லை. ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒவ்வொரு மாதிரியான ஊதியம் வழங்கப்படுவதையும் மாநில அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார் ராமசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.