நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கிராமங்களில் அச்சுறுத்தும் சாலையோர திறந்தநிலைக் கிணறுகள்!

திருச்சி, பிப். 15: திருச்சி மாவட்டத்தில் ஆற்றுப் பாசனம் இல்லாத மண்ணச்சநல்லூர், துறையூர், தொட்டியம் உள் பகுதிகளில் உள்ள சாலையோர திறந்தநிலைக் கிணறுகள், அந்த வழியாகச்  செல்லும் பொதுமக்களுக்கு அச்சுறுத்த

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:13 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, பிப். 15: திருச்சி மாவட்டத்தில் ஆற்றுப் பாசனம் இல்லாத மண்ணச்சநல்லூர், துறையூர், தொட்டியம் உள் பகுதிகளில் உள்ள சாலையோர திறந்தநிலைக் கிணறுகள், அந்த வழியாகச்  செல்லும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

  மதுரை அருகே அண்மையில் நேரிட்ட விபத்தில் திருமணம் முடிந்து, மறுவீட்டு விருந்துக்கு மணமக்களை விட்டுவிட்டுத் திரும்பிய வேன், சாலையோர திறந்தநிலைக் கிணறு ஒன்றில் பாய்ந்ததில் 9 பேர் இறந்தனர். இதுபோன்ற கிணறுகள் மாநிலம் முழுவதும் இருக்கின்றன.

  குறிப்பாக, ஆற்றுப்பாசனம் இல்லாத பகுதிகளில் இந்தக் கிணறுகளை அதிகம் காண முடியும். தரையோடு தரையாக அதேநேரத்தில் வட்டமாகவோ, சதுரமாகவோ- எந்த வடிவமும் இன்றி இந்தக் கிணறுகள் பரந்து விரிந்து காணப்படுன்றன. சில இடங்களில் கல்களைப் பதித்து சில வடிவங்களைப் பெற்றிருக்கலாம்.

  பொதுவாக, அந்தந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களைப் பொருத்தவரை இவ்வகை கிணறுகள் சாதாரணமானவை என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

  சிறு குழந்தையிலிருந்து, பெண்கள், ஆண்கள் என அத்தனை பேரும் சர்வசாதாரணமாக உள்ளே இறங்கி குளித்துவிட்டு ஏறுகின்றனர். பெரும்பாலான கிணறுகளில் முறையான படிக்கட்டுகள் இல்லாத நிலையிலும்கூட. கிணறுகள் அவர்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பது உண்மைதான்.

  ஆனால், வாகனங்களில் சாலை வழியாகச் செல்லும்போது, அந்த வாகனம் நிலை தடுமாறினால் விபத்து இயல்பானது. இந்த நிலையிலிருந்து பார்த்தால் திறந்த நிலைக் கிணறுகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.

  கிணறுகளின் அகலத்தை ஒழுங்குபடுத்தி அதைச் சுற்றி குறைந்தபட்சம் 5 அடிக்காவது பாதுகாப்புச் சுவர் அமைக்கலாம் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. பல கிணறுகளைச் சுற்றி மரங்கள் அடர்ந்து வளர்ந்து, கிணறு இருப்பதே தெரியாத நிலையும் இருக்கிறது. முதல் கட்டமாக இந்த நிலையாவது மாற்றப்பட வேண்டும்.  குறிப்பாக, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் நொச்சியத்திலிருந்து ஓமாந்தூர் செல்லும் சாலையில் இதுபோன்ற திறந்த நிலைக் கிணறுகளை ஏராளம் பார்க்க முடியும். அதிலும், குறிப்பாக சாலையோரத்திலேயே இந்தக் கிணறுகள் இருக்கின்றன.

  இவற்றை முறைப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தங்களின் பகுதியிலுள்ள திறந்தநிலைக் கிணறுகளின் பட்டியலை எடுத்து, அவற்றில் அச்சம் மிகுந்த, சாலையோரக் கிணறுகளின் பட்டியலை வடிகட்டி அவற்றின் உரிமையாளர்களை அழைத்து அறிவுறுத்தலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

  இந்தப் பட்டியலை எடுக்கும்போது, பாழடைந்த கிணறுகளும் கணக்கில் வரும்பட்சத்தில் அவற்றை மூடுவதற்கான ஏற்பாட்டையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.