நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சமச்சீர் கல்வி: புதுவையில் குழப்பம்

காரைக்கால், அக். 6: அனுமதியின்றி சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை நடத்தி வந்த தனியார் பள்ளிகள் அனைத்தும், சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை தொடரவேண்டும் என்ற புதுவை கல்வித் துறையின் திடீர் உத்தரவால் மாணவர்கள

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:44 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், அக். 6: அனுமதியின்றி சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை நடத்தி வந்த தனியார் பள்ளிகள் அனைத்தும், சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை தொடரவேண்டும் என்ற புதுவை கல்வித் துறையின் திடீர் உத்தரவால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

 புதுவை மாநிலத்தில் சில தனியார் ஆங்கிலப் பள்ளிகள் அனுமதியின்றி சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படி பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வந்தன. மாநில அரசுப் பாடத் திட்டத்தின்படி இயங்க வேண்டிய தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு கல்வித் தரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்துக்கு நிகரான புத்தகங்களை வரவழைத்து பாடம் நடத்தி வந்தன.

 இந்த நிலையில், தமிழ்நாடு கல்வி வாரியத்தின்படி, புதுவையில் பாடத் திட்டம் உள்ளதால், சி.பி.எஸ்.இ. அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளும் சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும், அதற்கான பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை புதுவை கல்வித் துறை அண்மையில் பிறப்பித்தது. இதையடுத்து, இந்த உத்தரவு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

 தனியார் பள்ளி மாணவர்கள் பழைய முறையில் காலாண்டுத் தேர்வு எழுதிவிட்ட நிலையில், திடீரென சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர் கூறியது:

 பல பள்ளிகளிலும் மாணவர்கள் பழைய பாடத் திட்டத்திலேயே காலாண்டுத் தேர்வை எழுதிவிட்ட நிலையில், அனைத்துத் தனியார் பள்ளிகளும் சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் எனக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இதனால், மாணவர்களுக்கு பெரும் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், காரைக்காலில் பல பள்ளிகளில் சமச்சீர் பாடப் புத்தகங்கள் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இந்த நிலையில், தனியார் பள்ளிகள் சமச்சீர் பாடப் புத்தகங்களை அனைத்து மாணவர்களுக்கும் இப்போது வாங்கித் தந்து, பாடம் நடத்தத் தொடங்குவது சாத்தியம் இல்லாததாகும். இதுகுறித்து புதுச்சேரி கல்வித் துறை மாணவர்களுக்கு சாதகமான, தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

 இதுகுறித்து காரைக்காலைச் சேர்ந்த கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது:

 புதுவை கல்வித் துறையின் உத்தரவைத் தொடர்ந்து, சில தனியார் பள்ளிகள் கல்வித் துறையிடம் தங்களது கருத்துகளைத் தெரிவித்தன.

 தமிழ்நாடு கல்வி வாரியத்தை புதுவை சார்ந்திருப்பதால், புதுவையில் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை விளக்கியுள்ளோம்.

 பல பள்ளிகள் சமச்சீர் கல்வியைத் தொடர்வது குறித்த ஒப்புதல் கடிதத்தை கல்வித் துறைக்கு அளித்துள்ளன.

 புத்தகம் கிடைக்கவில்லை என்றாலும், இணையதளத்திலிருந்து பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து பாடம் நடத்தியாக வேண்டும்.

 இதைத் தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.

 நிகழ் கல்வியாண்டுத் தொடக்கத்திலேயே இதுகுறித்து கல்வித் துறை தெளிவான உத்தரவை வழங்கியிருந்தால், அனைத்துத் தனியார் பள்ளிகளும் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை பின்பற்றியிருக்கும்.

 ஆனால், தற்போது காலாண்டுத் தேர்வு எழுதிவிட்ட நிலையில், திடீரென சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.