திருச்சி மாநகராட்சித் தேர்தலில் புது சிக்கல்!
திருச்சி, செப். 30: போதிய கால அவகாசம் இல்லாததால், திருச்சி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் தேர்தல் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தப் புது


திருச்சி, செப். 30: போதிய கால அவகாசம் இல்லாததால், திருச்சி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் தேர்தல் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தப் புது சிக்கலை முன்வைத்து, மாநகராட்சி தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
திருச்சி மாநகராட்சிக்கு அக்டோபர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (செப். 30) தொடங்கியது.
வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாளாக அக். 7-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அக். 8-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 10-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 10-ம் தேதி மாலைதான் அங்கீகரிக்கப்படாத- பதிவு செய்த கட்சிகள் (புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள்), சுயேச்சைகளுக்கு மாநகராட்சித் தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
வாக்குப்பதிவு 17-ம் தேதி நடைபெறும்போது 15-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொள்ள முடியாது. இந்த நிலையில் பதிவு செய்த கட்சிகளுக்கும், சுயேச்சைகளுக்கும் பிரசாரம் மேற்கொள்ள மிகச்சரியாக 5 நாள்கள்தான் அவகாசம் இருக்கிறது. இதில் சின்னத்தைக் குறிப்பிட்டு துண்டுப் பிரசுரங்கள் அச்சிடும் பணி வேறு இருக்கிறது- ஒரு நாள் முடிந்துவிடும்!
இந்த நான்கு நாள்களில் மேயர் வேட்பாளராகப் போட்டியிடுபவர் தற்போதுள்ள 65 வார்டுகளுக்கும் சென்று பிரசாரம் மேற்கொள்ள முடியாது என்பதுடன், சட்டவிதிகளும் இதை ஒப்புக்கொள்ளாது என்பதுதான் தற்போதுள்ள பிரச்னை.
இதில் இன்னொரு பெரிய சிக்கலும் இருக்கிறது. திருச்சி மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக். 13-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலையொட்டி, மேற்குத் தொகுதிக்குள்பட்ட 21 மாநகராட்சி வார்டுகளில் அக். 11-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொள்ளவே முடியாது.
இதன்படி பார்த்தால் பதிவு செய்யப்பட்ட கட்சிகளும், சுயேச்சைகளும் மேற்குத் தொகுதிக்குள்பட்ட 21 வார்டுகளுக்குள் அக். 11 மாலை 5 மணி வரை ஒரு பகல் முழுவதும், மேற்குத் தொகுதி தேர்தல் முடிந்த பிறகு அக். 14-ம் தேதி காலை தொடங்கி, 15-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள முடியும்.
குறிப்பிட்ட இந்த 21 வார்டுகளுக்குள் முழுமையாக மூன்று நாள்கள்கூட பிரசாரம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னை தொடர்பாக திருச்சி மக்கள் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ஏ. கமருதீன் மாநிலத் தேர்தல் ஆணையர் முதல், மாநகராட்சி ஆணையர் வரை வெள்ளிக்கிழமை இரவு மனு அனுப்பியுள்ளார்.
ஏற்கெனவே 2006 உள்ளாட்சித் தேர்தலில் 43-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் இவர். தற்போது மாநகராட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், தனக்கு பிரசாரத்துக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது நியாயமில்லாத, சட்ட முரணான, ஒருதலைப்பட்சமான நிலை என கமருதீன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் இந்த பிரச்னையை மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை கொண்டு செல்ல உள்ளன.
வேட்புமனு அளிக்கும்போதே தங்களுக்கு சின்னங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இவர்கள் முன்வைத்தாலும், சட்டம் இதற்கு இடமளிக்காது. பரிசீலனை முடியாமல் யாருக்கும் சின்னம் ஒதுக்கவும் முடியாது.
யாரேனும் நீதிமன்றத்துக்குச் செல்லும் பட்சத்தில், மாநகராட்சித் தேர்தல் நடைபெறுவதே கேள்விக்குள்ளாகும் என்கின்றனர் வழக்குரைஞர்கள். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு இந்த பிரச்னை இல்லை என்பதால், இந்தச் சிக்கல் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...