ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆபத்தான நிலையில் ஆளில்லாத ரயில்வே கேட்

திருச்சி,  பிப்.  27: திருச்சி கிராப்பட்டி- எடமலைப்பட்டிபுதூர் இடையே புதிய ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதால், ஆளில்லாத ரயில்வே கேட்டை கடந்துச் செல்லும் இலகுரக வாகனங்கள் விபத்தில் சிக்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:40 pm

தி. இன்பராஜ்

திருச்சி,  பிப்.  27: திருச்சி கிராப்பட்டி- எடமலைப்பட்டிபுதூர் இடையே புதிய ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதால், ஆளில்லாத ரயில்வே கேட்டை கடந்துச் செல்லும் இலகுரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி- மதுரை சாலையில் கிராப்பட்டி- எடமலைப்பட்டிபுதூர் இடையே உள்ள ரயில்வே கிராஸிங்கில் ரூ. 34 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப். 2-ம் தேதி தொடங்கியது.

இதையொட்டி, கிராப்பட்டி- எடமலைப்பட்டிபுதூர்  இடையே உள்ள ரயில்வே கேட் சனிக்கிழமை முதல் மூடப்பட்டது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து எடமலைப்பட்டிபுதூர் செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் அனைத்தும் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

மேலும், கிராப்பட்டி பகுதி மக்களுக்காக மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கிராப்பட்டி மசூதி வரை அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரு சக்கர, சிறிய நான்கு சக்கர வாகனங்கள் கிராப்பட்டியில் இருந்து அன்புநகர் வழியாகச் சென்று ஆளில்லாத ரயில்வே கேட்டை கடந்து ஸ்டேட் வங்கி காலனி வழியாக எடமலைப்பட்டிபுதூர் சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆளில்லாத ரயில்வே கேட்டை கடப்பதன் மூலம் கார்கள், ஷேர் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பாதுகாப்பில்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கிராப்பட்டி- எடமலைப்பட்டிபுதூர் இடையே பேருந்து போக்குவரத்து தடைப்பட்டதால், இலகுரக வாகனங்கள் அனைத்தும் ஆளில்லாத ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன. குறிப்பாக, ஷேர் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் இந்தப் பாதையில் சென்று வருகின்றன.

ரயில்வே தண்டவாளத்தையொட்டி அடர்ந்த முள்செடிகள் இருப்பதால், ரயில் வருவதை வாகன ஓட்டுநர்கள் எளிதாகக் கணிக்க முடியாத நிலையும் உள்ளது. மேலும், ரயில் வரும் நேரங்களைப் பொருள்படுத்தாமல் தண்டவாளத்தைக் கடப்பதிலேயே வாகன ஓட்டுநர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

கிராப்பட்டி- எடமலைப்பட்டிபுதூர் இடையே வேறு பாதை இல்லாத ஆளில்லாத ரயில்வே கேட்டை ஆள் உள்ள ரயில்வே கேட்டாக மாற்ற வேண்டுமானால், ஏறத்தாழ ரூ. 4 கோடி செலவாகும் என ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது. எனவே, அதற்கும் இங்கு வாய்ப்பில்லை.

மேலும், ரயில்வே சட்டப்படி ஆளில்லாத ரயில்வே கேட்டை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை வாகன ஓட்டுநர்கள்தான் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இந்தப் பாதையில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பாகாது.

தவிர, இந்த கேட்டை கடக்கும் போது ஏதேனும் வாகனம் மீது ரயில் மோதி விபத்து ஏற்படும் போது ரயிலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கு வாகன ஓட்டுநர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என ரயில்வே சட்டம் கூறுகிறது.

தமிழகத்தில் பல இடங்களில் ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்கும் போது நிகழ்ந்த விபத்துகளால் நாம் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.

கிராப்பட்டியில் உள்ள பள்ளிக்கு எடமலைப்பட்டிபுதூர், சுற்றுப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் சென்று வருகின்றர். இதனால், பள்ளி செல்லும் நேரத்திலும், வீடு திரும்பும் நேரத்திலும் இந்த ரயில்வே கேட் பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இந்த நிலையில், தற்போது இலகுரக, இரு சக்கர வாகனப் போக்குவரத்தும் இந்தப் பாதை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பாதையில் விபத்து ஏதேனும் ஏற்படுவதற்கு முன்னதாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு. ரயில் வரும் நேரங்களில் இந்தப் பாதையில் ரயில்வே ஊழியர்கள் மூலமாகவோ, போலீஸôர் மூலமாகவோ வாகனங்கள் தண்டவாளத்தைக் கடந்து செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில வர்த்தக அணித் தலைவர் இல. கண்ணன் கூறியது:

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஆளில்லாத ரயில்வே கேட்டை பயன்படுத்தும்படி கூறப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் ஷேர் ஆட்டோக்களில் அதிகக் கூட்டம் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களைத் திரட்டிப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.