மேலும், சின்னமுட்லு பகுதியில் உள்ள பச்சைமலை உச்சியில் இருந்து, கொட்டும் அருவியானது எட்டெருமை பாலி என்று அந்தப் பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலமான அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலான நான்கு மாதங்களும், பச்சைமலைப் பகுதியில் மிகுதியாகப் பொழியும் மழை நீரானது, எட்டெருமை பாலி அருவி வழியாக வழிந்தோடி, கல்லாற்றில் பெருக்கெடுத்து, அரும்பாலூர் பகுதியில் உள்ள பிரதான ஏரிகள் நிரம்பியது போக, எஞ்சிய மழைநீர் அனைத்தும் கல்லாற்றின் வழியாகக் கரைபுரண்டோடி கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவிதப் பலனுமின்றி கடலில் கலக்கும் இந்த மழைநீரைச் சேமிக்க சின்னமுட்லு பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, கடந்த 50 ஆண்டுகளாக நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினர் அந்த நீர்த்தேக்கம் அமையவுள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்டு, இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 9 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, தமிழக அரசின் ஒப்புதலுடன், மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.