தொடங்கியது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு!
திருச்சி, செப். 26: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும் திருச்சியில் இப்போதே தொடங்கிவிட்டது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு. அரசின் இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கும் த


திருச்சி, செப். 26: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும் திருச்சியில் இப்போதே தொடங்கிவிட்டது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு.
அரசின் இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கும் திட்டம் வந்த பிறகு "எல்லோருக்கும் பொதுவாக' என்று அனைத்துத் தரப்பு மக்களின் வீடுகளிலும் அத்தியாவசியமானவற்றுள் ஒன்றாக சமையல் எரிவாயு மாறிவிட்டது. கால்கடுக்கக் காத்திருந்து மண்ணெண்ணெய் வாங்கி உபயோகித்தபோதுகூட, இல்லாத வெறுப்பு சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டால் இப்போது வந்துவிடுகிறது.
இந்த நிலையில், இயல்பாகவே சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் குளறுபடிகளும், சிலிண்டர் திருட்டுகளும் வந்து நுழைந்துவிட்டன. இதற்கெனவே பிரத்யேகமாக மாவட்ட அளவில் குறைகேட்புக் கூட்டங்களும் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் தொடங்கி, அதன்பின் ஒவ்வொரு வட்டமாக இப்போது இந்தக் கூட்டங்கள் பரந்து விரிந்திருக்கின்றன.
இந்நிலையில்தான், திருச்சி மாநகரில் இப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தொடங்கியிருக்கிறது. பண்டிகைக் காலங்களில் இது வழக்கம்தான் என்றாலும், ஒரு மாதத்துக்கு முன்னதாகவேவா? என்ற கேள்வியுடன் இதுகுறித்து உலவி வரும் தகவல்களும் அதிர்ச்சியை உண்டாக்குகின்றன.
அதாவது, திருச்சி மாவட்டத்துக்கு என்று ஒதுக்கப்படும் சிலிண்டர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்கின்றனர் சில விநியோகஸ்தர்கள்.
இதனால், தொலைபேசியில் அழைத்து கேள்வியெழுப்பும் வாடிக்கையாளர்களிடம் "லோடு வரவில்லை' என்ற குரல் பதிலாகக் கிடைக்கிறது (நல்ல வேளையாக கணினியில் குரலை பதிவு செய்துவிடவில்லை!).
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளும் சமையல் எரிவாயு விநியோக நிறுவன அலுவலர்கள், வேறு மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற தகவலை ஒப்புக்கொள்ளவில்லை. விரைவில் சரி செய்யப்படும் என்றே தெரிவிக்கின்றனர்.
வார விடுமுறை நாள்களுக்கு இடையே "விநாயகர் சதுர்த்தி' போல விடுமுறை நாள் வந்துவிட்டால், விநியோகஸ்தர்களின் கணக்கில் கூடுதலாக ஒரு நாள் சேர்ந்துவிடும். மாநகரைப் பொருத்தவரை, அனைத்து விநியோகஸ்தர்களையும் சேர்த்து சராசரியாக ஆயிரம் பதிவுகள் ஒரு நாளைக்கு வந்துவிடுகின்றன.
தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கூடுதல் பதிவு ஏற்பட்டால் கணக்குப்படி வர வேண்டிய சிலிண்டர்கள் வந்தாலும், விநியோகம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டு, அதிலும் "விஐபி வரிசை' தொற்றிக் கொண்டு சிக்கல் ஏற்படுகிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதனால், இப்போது எல்லா விநியோகஸ்தர்களின் கடைகளின் வாசலிலும் "இந்தத் தேதியில் பதிவு செய்தவர்களுக்கு இன்று விநியோகம்' என்ற வாசகமும் இடம் பெறத் தொடங்கிவிட்டது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி எரிவாயு நிறுவனத்தினர் கவனமாக இருந்து முறையான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். திருச்சி மாவட்டத்துக்கு உரிய எரிவாயு சிலிண்டர்களை பெற்றுத் தருவதுடன், பண்டிகைக் காலத்துக்கென கூடுதலாக ஒதுக்கீடு பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...