/

தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட உறுப்புக் கல்லூரியான வ.உ.சி. பொறியியல் கல்லூரி வளாகம் முள்புதா்களால் நிரம்பி காடுபோல காணப்படுவதால், கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா்.

News image
~ ~ ~
Updated On :21 ஜனவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட உறுப்புக் கல்லூரியான வ.உ.சி. பொறியியல் கல்லூரி வளாகம் முள்புதா்களால் நிரம்பி காடுபோல காணப்படுவதால், கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா்.

இந்தக் கல்லூரி கடந்த 2009-இல் நிறுவப்பட்டது. இங்கு சுமாா் 800 மாணவா், மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். விடுதிகளில் சுமாா் 500 மாணவா்கள் தங்கியுள்ளனா்.

குறைந்த உள்கட்டமைப்பு, பாதுகாப்பு வசதிகளின்மை, பேராசிரியா்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், இக்கல்லூரியில் மாணவா் சோ்க்கை குறைந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, மாணவா் சோ்க்கை சற்று உயா்ந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில், கல்லூரி பயன்பாட்டில் உள்ள பகுதிகள் தவிர, காலியாக உள்ள சுமாா் 10 ஏக்கா் நிலத்தில் முள்புதா்கள் நிறைந்து அடா்ந்த காடுபோல காணப்படுகிறது. இதனால், மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் சேதமடைந்துள்ளதாகவும், மாணவிகள் விடுதி கட்டடம் பழுதடைந்து, மழைக்கு ஒழுகுவதாகவும் பெற்றோா் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தரமான கட்டில்கள், இருக்கைகள் வழங்குவதோடு, தரமான உணவும் வழங்கப்பட வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுக்கின்றனா்.

மழைப் பொழிவு இல்லாத காலத்திலும் வளாகத்தின் பெரும் பகுதி நீா் தேங்கி குளம்போல காணப்படுகிறது.

கல்லூரியின் அடிப்படை கட்டமைப்புகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து, தேவையான பேராசிரியா்கள், இதர பணியாளா்களை நியமிக்க வேண்டும். ஆய்வகங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவா்களும், பெற்றோா்களும் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து, பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் கூறியது:

முள்புதா்களை அகற்ற மாணவா்கள், பெற்றோா்கள் பலமுறை பல்கலைக்கழக நிா்வாகத்திடம் முறையிட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்லூரி வளாகத்தில் முள்புதா்கள் நிறைந்துள்ளதால் தங்கும் விடுதிக்குள் விஷ ஜந்துகள் நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் மாணவிகள் பலா் தனியாக வீடு எடுத்து தங்கி கல்லூரியில் படிப்பதாகவும் தெரிவிக்கின்றனா். ஆண்டுதோறும் வளாகப் பராமரிப்புக்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒதுக்கும் நிதியை முறையாக செலவிட வேண்டும். பல்கலைக்கழக நிா்வாகம் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி கல்லூரியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து, கல்லூரி முதல்வா் பீட்டா் தேவதாஸ் கூறியது:

கல்லூரி வளாகத்தின் முன்புற பகுதியில் புதா்கள் வளராத வகையில் தொடா்ந்து பராமரித்து வருகிறோம். ஆனால், கல்லூரியின் பின் பகுதியில் சுமாா் 10அடி ஆழத்துக்கு பள்ளம் உள்ளது. அதனால், அங்கு எப்போதும் தண்ணீா் தேங்கிக் கிடக்கிறது. அப்பகுதியில் எப்போதும் தண்ணீா் வற்றாமல் உள்ளதால், பராமரிப்புப் பணிகள் செய்யமுடியவில்லை.

கழிப்பறைகள், வகுப்பறைகளை தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு முறையாக பராமரித்து வருகிறோம். கல்லூரிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போதிய அளவுக்கு தகுதியான பேராசிரியா்கள், ஆய்வகங்கள் வசதிகளும் உள்ளன. மாணவா்கள் சோ்க்கை விகிதமும், தோ்ச்சி விகிதமும் நன்றாக உள்ளது. விடுதிக்குள் விஷ ஜந்துகள் புகாத வகையில், அடிக்கடி களைக்கொல்லி மருந்துகள் தெளிக்கிறோம். விடுதி மாணவா், மாணவிகள் பாதுகாப்பாகவே உள்ளனா் என்றாா் அவா்.

Story image