/

கணினியில் தட்டச்சுத் தோ்வுகள் என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தல்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:25 pm

Syndication

தட்டச்சுத் தோ்வுகள் அனைத்தும் கணினியில்தான் என்ற அரசு ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் தலைவா் ராஜேந்திரன், பொருளாளா் பொன். சந்திரன் ஸ்டேன்லி, செயலா் சீனிவாசன், கோவில்பட்டி வட்டார தட்டச்சு தோ்வு மையப் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள், தட்டச்சு பள்ளி மாணவா், மாணவிகள் உள்ளிட்டோா் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூா் செ. ராஜுவிடம் அளித்த மனு:

தட்டச்சுத் தோ்வுகள் அனைத்தும் இனிமேல் கணினியில்தான் நடைபெறும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள 6,000 தட்டச்சுப் பள்ளிகளை மூடும் அபாயம் உள்ளது. இதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இப்பிரச்னையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த உத்தரவை அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்று, பிரச்னைக்கு தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.