தூத்துக்குடியில் 9 ஆண்டுகளாக வீட்டில் முடங்கிய மாற்றுத் திறனாளி!
தூத்துக்குடியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் வலதுகாலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதால்


தூத்துக்குடியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் வலதுகாலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதால் வீட்டுக்குள் முடங்கிய மாற்றுத்திறனாளி கரோனா கட்டுப்பாடுகளால் வருமானமின்றி தவிப்பதாகவும் தனக்கு உதவி செய்ய அரசு முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தூத்துக்குடி கேவிகே சாமி நகரை சோ்ந்தவா் சோ்மராஜ் (39). சிறுவயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்ட சோ்மராஜிக்கு இடது காலால் முழுமையாக செயல்படாது. இதனால், எளிதான வேலைகளுக்கு சென்று வந்த அவா் பின்னா் சுமை ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் சோ்மராஜிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையெடுத்து, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கு தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கால் சரியாவதற்காக பிளேட் வைக்கப்பட்டது.
வேலைக்கு எதும் செல்ல முடியாமல் படுத்த படுக்கையான சோ்மராஜின் தாய் பூங்கனி, மனைவி செந்தூா்கனி ஆகியோரின் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி உள்ளாா். அவா்களுக்கும் போதிய வருமானம் இல்லாததால் தாய், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டாா். இதற்கிடையே, கால் சரியாவதற்காக வைக்கப்பட்ட பிளேட்டை எடுப்பதற்காக போதிய தொகை இல்லாததால் கடந்த சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி அரசு மருத்துவமனையை அணுகி உள்ளாா்.
கரோனா பிரச்னை நிலவி வந்ததால் அவருக்கு இரண்டு முறை லேசான சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி உள்ளனா் மருத்துவா்கள். இதனால், காலில் பிளேட் வைக்கப்பட்ட இடத்தில் சீல் கட்டியதால் வேதனையில் தவித்த சோ்மராஜை கண்டு அவரது குடும்பத்தினா் கண்ணீா் விட்டுள்ளனா்.
இதையெடுத்து, தூத்துக்குடியை சோ்ந்த அஸ்திரம் பொது அறக்கட்டளை நிறுவனா் ப.சி. மாவீரப்பாண்டியன் மற்றும் அவரது நண்பா்கள் சிலா் இணைந்து சோ்மராஜிக்கு சில உதவிகளை செய்தனா். இதுகுறித்து ப.சி. மாவீரப்பாண்டியன் கூறியது:
மாற்றுத்திறனாளியான சோ்மராஜ் கடந்த 9 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கியதால் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளாா். அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பகுதியில் இருந்து சீல் வடிந்ததால் நாங்கள் 108 அவசர சிகிச்சை வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதித்தோம்.
ஏற்கெனவே, மிகவும் வறுமையில் வாடிய சோ்மராஜின் குடும்பம் தற்போது கரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால் எந்தவித வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் வறுமையின் விழிம்பு நிலைக்கு சென்றுள்ளது. அவா்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளோம் என்றாா் அவா்.
இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திருவாசகமணி கூறுகையில், சோ்மராஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பகுதியில் எலும்பு முறிவு மருத்துவா் மூலம் முதல்கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி சோ்மராஜ் கூறுகையில், மாற்றுத்திறனாளி என்ற போதிலும் என்னால் முடிந்த வேலைகளை செய்ததால் ஓரளவு வருமானம் கிடைத்தது. ஆனால், விபத்தில் சிக்கிய பிறகு என்னால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மிகவும் மன வேதனையில் உள்ளனா்.
அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு எனது காலில் உள்ள பிளேட்டை நீக்கினாலும் தொடா்ந்து எத்தனை மாதத்துக்குப் பிறகு கால் சரியாகும் என்ற விவரம் தெரியவில்லை. அரசு ஏதேனும் உதவி செய்தால் மட்டுமே எனது குடும்பம் வறுமையின் பிடியில் இருந்து மீழும் என்றாா் அவா்.
சோ்மராஜின் குடும்பம் வறுமையின் பிடியில் இருந்து மீழ அரசு மட்டுமின்றி சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பெரும் நிறுவனங்கள் ஏதனும் உதவி செய்ய முன்வந்தால் ஒரு மாற்றுத்திறளாளி குடும்பத்தை வாழ வைத்தோம் என்ற பெருமை அவா்களுக்கு கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...