ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட தூத்துக்குடி!: கூடுதல் கவனம் செலுத்த பெற்றோர் வேண்டுகோள்

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் சில ஆண்டுகளாக முதல் 5 இடத்துக்குள் வந்த தூத்துக்குடி மாவட்டம், நிகழாண்டு 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பெற்றோர், மாவட்ட

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:05 pm

தி. இன்பராஜ்

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் சில ஆண்டுகளாக முதல் 5 இடத்துக்குள் வந்த தூத்துக்குடி மாவட்டம், நிகழாண்டு 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பெற்றோர், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் மாநில அளவில் சிறப்பிடம், குறிப்பாக முதல் 5 இடத்துக்குள் வருவதுண்டு. இதற்கு, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளும் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று வருவதே காரணம். ஆனால், நிகழாண்டில் பிளஸ் 2 தேர்வில் 95.52 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று, இம்மாவட்டம் மாநில அளவில் 7ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 2 தேர்வெழுதிய 20,923 பேரில் 19,985 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 9,166 மாணவர்களில் 8,510 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.84 சதவீத தேர்ச்சி. 11,757 மாணவிகளில் 11,475 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.60 சதவீத தேர்ச்சி.
மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தேர்வெழுதிய 5,305 மாணவர்மாணவிகளில் 4,902 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.40 சதவீத தேர்ச்சி.
2014ஆம் ஆண்டில் 95.72 சதவீத தேர்ச்சியும், 2015இல் 95.50 சதவீத தேர்ச்சியும், 2016இல் 95.47 சதவீத தேர்ச்சியும் பெற்று மாநில அளவில் 5ஆவது இடத்தை தூத்துக்குடி மாவட்டம் பிடித்தது. கடந்த ஆண்டு 96.44 சதவீத தேர்ச்சி பெற்று 4ஆவது இடத்துக்கு முன்னேறியது.
இந்நிலையில், நிகழாண்டு 95.52 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சிவகங்கை, திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றமடைந்துள்ளன.
கடந்த ஆண்டுகளைவிட நிகழாண்டு 200க்கு 200 மதிப்பெண் எடுத்தோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு வணிகவியல் பாடத்தில் 230 பேர் முழு மதிப்பெண் எடுத்த நிலையில், இப்போது 45 பேர் மட்டுமே 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதேபோல, கணக்குப் பதிவியலில் 155 பேர் 200 மதிப்பெண் எடுத்த நிலையில் தற்போது 97 பேரும், கணிதத்தில் 88 பேர் 200 மதிப்பெண் எடுத்த நிலையில் இப்போது 47 பேரும், கணினி அறிவியலில் 34 பேர் 200 மதிப்பெண் எடுத்த நிலையில் இப்போது 9 பேர் மேட்டுமே பெற்றுள்ளனர். இது, பெற்றோர், கல்வியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த தனியார் பள்ளிகள் இருப்பதாகக் கூறினாலும் நிகழாண்டில் ஒருவர்கூட முதல் குரூப்' எனப்படும் உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண் எடுக்கவில்லை. இதேபோல, இயற்பியலிலும் ஒருவர்கூட 200 மதிப்பெண் எடுக்கவில்லை. இது, அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
வரலாறு, புவியியல், தட்டச்சு, அலுவலக மேலாண்மை, பொது இயந்திரவியல் உள்ளிட்ட பாடங்களில் வழக்கமாக ஏராளமானோர் 200 மதிப்பெண் எடுப்பர். ஆனால், அந்தப் பாடங்களிலும் நிகழாண்டு ஒருவர்கூட முழு மதிப்பெண் பெறவில்லை.
எனவே, தூத்துக்குடி மாவட்டம் மீண்டும் கல்வியில் சிறப்பிடம் பிடிக்க வேண்டுமானால் கல்வித் துறையில் சிறப்பான அதிகாரிகளைப் பணியமர்த்தி பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும், கல்வித் துறையில் நீண்ட நாளாக ஒரே இடத்தில் இருப்போரை மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மனோகரன் கூறியது: பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் 4ஆவது இடத்திலிருந்த நாம் இப்போது 7ஆவது இடத்துக்கு வந்துள்ளோம். வரும் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி மீண்டும் முன்னேற்றமடைய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
மாணவப் பருவத்தின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி தூத்துக்குடி மாவட்டத்தை மீண்டும் கல்வித் துறையில் முன்னேற்றமடைய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.