தூத்துக்குடியில் விஸ்வரூபம் எடுக்கும் மீனவர்கள் விவகாரம்!
தூத்துக்குடியில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இடையே பிரச்னை உருவாகி உள்ளதால், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம்


தூத்துக்குடியில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இடையே பிரச்னை உருவாகி உள்ளதால், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு கடலுக்குச் சென்று மீன்பிடித்து விட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்பிவிட வேண்டும் என்பது மீன் வளத்துறை உத்தரவு. 1983 ஆம் ஆண்டு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டப்படி இரவில் கடலில் தங்கி மீன்பிடிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
ஆனால், போதிய மீன்வரத்து இல்லாததால் இரவில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது விசைப்படகு மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை. அதற்கு இதுவரை எந்தவித அனுமதியும் கிடைக்கவில்லை. விசைப்படகுகளை இரவில் தங்கி மீன்பிடிக்க அனுமதித்தால் தங்களது வாழ்வாதராம் பாதிக்கும் என்றும், வலைகள் சேதப்படுத்தப்படும் என்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி மீன்வளத் துறை அதிகாரிகளின் உத்தரவை மீறி 163 விசைப்படகுகளில் மீனவர்கள் இரவு கடலில் தங்கி மீன்பிடித்ததால், அந்த விசைப்படகுகளுக்கு ஒரு மாதம் கடலில் மீன்பிடிக்க தடை விதித்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், மீன்பிடி துறைமுகமும் மூடப்பட்டது.
இதற்கிடையே, நீதிமன்றத்தை நாடிய விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள், 2016 ஆம் ஆண்டு சட்டவிதிகளின்படி தங்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்; ஆனால் மீன்வளத் துறை அதிகாரிகள் 1983 ஆம் ஆண்டு சட்டவிதிகளின்படி தங்குகடலில் மீன்பிடிக்க அனுமதி கிடையாது என கூறுகின்றனர் எனக் கூறி வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, மீன்பிடி தடைக்காலம் கடந்த 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதுவரை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகினர். ஆனால், மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
அதாவது, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை பொறுத்தவரை 71 படகுகள் மட்டுமே பதிவு பெற்றுள்ளன. மீதியுள்ள 163 விசைப்படகுகள் எந்தவித பதிவும் பெறாமல் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிட்ட அரசாரணையில் 24 மீட்டர் நீளத்துக்குள்ளும், 240 குதிரைத்திறன் கொண்ட இயந்திரம் பயன்படுத்துவோரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என தெரிவித்துள்ளது. அரசாணைப்படி உள்ள படகுகளை மட்டுமே கடலுக்குச் செல்ல அனுமதிக்க முடியும் என்பது மீன்வளத் துறை அதிகாரிகளின் உத்தரவாக உள்ளது. அதாவது 24 மீட்டருக்கு அதிக நீளம் உள்ள படகுகளை ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கும் பணி தங்களுக்கு கிடையாது என்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெர்க்கன்டைல் மரைன் துறையின் பணி என்றும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடியில் தற்போது விசைப்படகு மீனவர்கள் 3 பிரிவுகளாக உள்ளனர். அவர்களை நம்பி நேரடியாக 5 ஆயிரம் மீனவர்களும், மறைமுகமாக 15 ஆயிரம் தொழிலாளர்களும் உள்ளனர். தமிழக அரசின் பதிவு பெற்ற 71 விசைப்படகு உரிமையாளர்கள் ஒரு பிரிவாகவும், 20 முதல் 24 மீட்டர் நீளம் கொண்ட விசைப்படகு உரிமையாளர்கள் ஒரு பிரிவாகவும், 24 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட விசைப்படகு உரிமையாளர்கள் ஒரு பிரிவாகவும் உள்ளனர். இதில், 20 முதல் 24 மீட்டர் நீளம் கொண்ட விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகில் 240 குதிரைத்திறனுக்கு அதிகமான இயந்திரங்களை பயன்படுத்தி வருவதாகவும், அரசின் விதிமுறைப்படி இயந்திரத்தை பொருத்த தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், 24 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட விசைப்படகு உரிமையாளர்கள் தங்களை ஆழ்கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மூன்று பிரிவு விசைப்படகு உரிமையாளர்களின் கீழ் உள்ள 5 ஆயிரம் விசைப்படகு மீனவர்களும் தற்போது எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் திரிசங்கு நிலையில் உள்ளனர்.
ஆனால், ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி கேட்கும் விசைப்படகு மீனவர்கள், 24 மீட்டர் நீளத்துக்கு அதிகம் கொண்ட விசைப்படகு மீனவர்கள் 12 கடல் மைல் தொலைவு தாண்டி மீன்பிடிப்பதால் நாட்டுப்படகுகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. ஆனால், நாட்டுப்படகு மீனவர்களுக்கும், எங்களுக்கும் பிரச்னை இருப்பது போல தொடர்ந்து தகவறான தகவல் பரப்பப்படுகிறது. இந்தப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்கின்றனர்.
முதலில் விசைப்படகு மீனவர்களின் கோரிக்கையான கடலில் தங்கி மீன்பிடிக்கும் பிரச்னை, தொடர்ந்து ஆழ்கடல் மீன்பிடிப்பு பிரச்னை, தற்போது நாட்டுப்படகு மீனவர்களின் எதிர்ப்பு என மீனவர்கள் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு விரைந்து இருக்க வேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தப் பிரச்னை குறித்து மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல் சேவியர் கூறியது: அரசின் விதிமுறைப்படி 24 மீட்டர் நீளமும், 240 குதிரைத்திறனும் கொண்ட விசைப்படகுகளை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிப்பதில் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. அரசின் உத்தரவுப்படி விசைப்படகுகளை எங்களிடம் ஆய்வுக்கு கொண்டுவந்தால் உடனடியாக கடலுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்க தயாராக உள்ளோம். ஆழ்கடல் மீன்பிடி தொடர்பாக நாங்கள் எந்தவித அனுமதியையும் வழங்க முடியாது. இந்தப் பிரச்னையில் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
பிரச்னைக்கு தீர்வு என்ன?
தூத்துக்குடியில் நிலவி வரும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு வழிமுறைகள் இருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் இருப்பது போல விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவ சங்கங்களுக்கு இடையே ஓர் இணக்கமான சூழலை மாவட்ட நிர்வாகமும், மீன்வளத் துறை அதிகாரிகளும் உருவாக்க வேண்டும். நாட்டுப்படகாக இருந்தாலும், விசைப்படகாக இருந்தாலும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்காமல் உரிய ஆய்வு மேற்கொண்டு அரசின் உத்தரவுப்படி உள்ள படகுகளை மட்டுமே கடலுக்குச் செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும். விதிமுறைகளின்படி இல்லாத படகுகளுக்கு உரிய கால அவகாசம் வழங்கலாம்.
நாட்டுப்படகு மீனவர்களின் குற்றச்சாட்டான தங்களது வலை சேதப்படுத்தப்படும் என்ற அச்சத்தைப் போக்க இருதரப்புக்குள்ளேயும் பேசி முடிவு எடுக்க ஒரு குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மீன்வளத்துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் இடம்பெற்றால் நல்லது என நடுநிலையான மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடியில் நிலவி வரும் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லையெனில் பிரச்னை பெரிதாக கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...