தூத்துக்குடியில் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் சீரமைக்கப்படுமா?
தூத்துக்குடியில் பராமரிப்பின்றி காணப்படும் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தூத்துக்குடியில் பராமரிப்பின்றி காணப்படும் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் மட்டுமன்றி உலக அளவில் ஸ்கேட்டிங் விளையாட்டானது சிறுவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. தனிநபர் விளையாட்டு என்பதாலும், சிறிய அளவிலான மைதானம் இருந்தாலே போதும் என்பதாலும் பெரும்பாலான பள்ளிகள் இந்த விளையாட்டை ஊக்கப்படுத்தி வருகின்றன. நிகழாண்டு முதல் மத்திய அரசின் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, டான்ஸ் ஸ்கேட்டிங் என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் மத்தியில் ஸ்கேட்டிங் பயிற்சி அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்கேட்டிங் வீரர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ரூ. 37 லட்சம் செலவில் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில்தான் 200 மீட்டர் ரிங் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கடந்த காலங்களில் ஏராளமானவர்கள் பயிற்சி பெற்று, போட்டிகளில் பங்கு பெற்றுள்ளனர். ஆனால், தற்போது அந்த மைதானம் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து ஸ்கேட்டிங் பயிற்சிக்கு உதவாத வகையில் உள்ளது. இதனால், ஸ்கேட்டிங் வீரர்கள் மாநகராட்சி சாலையில் பயிற்சி பெற்று வருகின்றனர். அரசு இந்த மைதானத்தைச் சீரமைத்துக் கொடுத்தால் வீரர்கள் நூறு சதவீதம் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மைதானம் அமைக்கப்பட்டபோது நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது மைதானத்தின் நடுவே உள்ள பகுதியில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் எந்தப் பயனும் இல்லாத நிலை உள்ளது. மேலும், காலை மற்றும் மாலை வேளைகளில் விளையாட்டுக்கு சம்பந்தமே இல்லாத நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முத்துநகர் கடற்கரையின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையம் எப்போதும் மூடிய நிலையிலேயே உள்ளதால், சிலர் இந்த மைதானம் பகுதியில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஸ்கேட்டிங் பயிற்சியாளர் ஈ. முபாரக் கூறுகையில், இந்தப் பயிற்சி மைதானத்தை பராமரித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாகவோ அல்லது ஏதேனும் ஸ்கேட்டிங் சங்கங்கள் மூலமாகவோ தொடர்ந்து பராமரித்து வந்தால் அதிகமான ஸ்கேட்டிங் வீரர்கள் உருவாவார்கள் என்றார்.
ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் ஒரு மாணவரின் தந்தையான பாஸ்கர் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான மாணவர்கள் அகில இந்திய அளவிலான போட்டிக்கு இதுவரை தகுதி பெற்றுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த மைதானத்தைச் சீரமைத்துக் கொடுத்தால் மாணவர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்றார்.
பூடானில் நடைபெறவுள்ள அகில இந்திய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள மாணவர் உதயகுமார் கூறுகையில், மாநகராட்சி சாலையில் பயிற்சி செய்து வரும்போது கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வருவதால் முழுமையாக பயிற்சியில் ஈடுபட முடியவில்லை; எனவே, ரிங் ஸ்கேட்டிங் மைதானத்தை சீரமைத்துக் கொடுத்தால் பயிற்சி பெற ஏதுவாக இருக்கும் என்றார்.
ரூ. 37 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த மைதானம் பராமரிப்பின்றி காட்சியளிப்பதால், உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு மைதானத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதே ஸ்கேட்டிங் வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...