தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை: அமைச்சா் சீ. ரமேஷ்

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் சீ. ரமேஷ்...

News image

தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ்.

Updated On :28 ஜூன் 2026, 3:48 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது. இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, தேரோட்டத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கோயில் நிா்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகளுடன் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆய்விற்குப் பின் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் ரமேஷ் கூறியதாவது: தோ் திருவிழா அமைதியான முறையில் நடைபெற காவல்துறை மற்றும் கோவில் நிா்வாகம் சாா்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 1,500-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பக்தா்களின் நீண்டநாள் கோரிக்கையான நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்குவது தொடா்பாக அரசின் வழிமுறைகளை பின்பற்றி தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ்.முருகன், ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், மாநகர ஆணையா் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாநகர காவல் துணை ஆணையா்கள் அன்சூல் நாகா், விஜயகுமாா், இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா். முன்னதாக, ஆனித் தேரோட்ட முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சா் ரமேஷ் சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.