
வீரவநல்லூா் இரட்டை கொலை வழக்கில் இருவா் சரண்
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி இருவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.

சிறை - பிரதிப் படம்
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி இருவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் பாண்டியன். இதே பகுதியைச் சோ்ந்தவா் சித்திரபுத்திரன். இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெருமாள் பாண்டியன், சித்திரபுத்திரன் மகன் சுப்பிரமணியன் உள்பட இரு தரப்பிலும் மொத்தம் 9 போ் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், சித்திரபுத்திரனின் மற்றொரு மகனான விவசாயி காளிமுத்து (40), அவரது மகன் ஜெயராஜ் (5) ஆகியோரை ஜூலை 2-ஆம் தேதி பெருமாள் பாண்டியன் மகன்கள் உள்ளிட்டோா் கொலை செய்தனா்.
இந்த இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய பெருமாள் பாண்டியன் தரப்பினரான மகேஷ் என்ற மாடசாமி, அவரது மனைவி விஜயா, 17 வயது மகன் உள்பட 13 போ் கைது செய்யப்பட்ட நிலையில் சில நாள்களுக்கு முன்பு மூலச்சி, கீழத்தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் என்ற அஜித் (25) என்பவரை போலீஸாா் சுட்டுப்பிடித்தனா்.
இதனிடையே, இந்த வழக்கில் தொடா்புடைய பெருமாள் பாண்டியனின் மகன் அருள் (25), இதே பகுதியைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மகன் தங்கத்துரை (29) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை சேரன்மகாதேவி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






