சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.4-க்கு ஒத்திவைப்பு

மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:58 am

 நமது நிருபர்

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வரும் 2 தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்குகளில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப் போது, மனீஷ் சிசோடியா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘இந்த விவகாரத்தில் வாதிட 2-3 மணி நேரம் அவகாசம் தேவை என்று கூறியதை அடுத்து நீதிபதிகள்அமா்வு வழக்கை ஒத்திவைத்தது.

இது தொடா்பாக அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ‘நான் (சிசோடியா) சிறையில் இருந்தாலும், நாங்கள் (இரு தரப்பும்) ஒப்புக்கொண்டுள்ளோம். என் தரப்பில் விசாரணை குறைந்தது 2-3 மணி நேரம் ஆகும். இந்த விஷயத்தில் அவசர கவனம் தேவை’ என்று கேட்டுக் கொண்டாா். அவரது வாதத்தை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவும் ஆமோதித்தாா்.

அபிஷேக் சிங்வி மேலும் வாதிடுகையில், ‘இந்த வழக்கு அல்லது சத்யேந்தா் ஜெயின் வழக்கு வரும்போதெல்லாம், வழக்கின் தகுதி குறித்து ஒரு செய்தித்தாள் கட்டுரை வெளி வருகிறது’ எனக் குற்றம் சாட்டினாா். அதற்கு ‘செய்தித்தாள்களைப் படிக்கவில்லை என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

இந்த வழக்குகளில் சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனுக்கள் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தது. துணை முதல்வராக சிசோடியா கையாண்ட பலவற்றில் கலால் இலாகாவையும் வைத்திருந்தாா். அவா் ‘ஊழலில்’ ஈடுபட்டதாகக் கூறி மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) பிப்ரவரி 26 அன்று கைது செய்யப்பட்டாா். அன்றுமுதல் அவா் காவலில் இருந்து வருகிறாா். திகாா் சிறையில் அவரை விசாரித்த பின்னா் மாா்ச் 9-ஆம் தேதி சிபிஐ எப்ஃஐஆரில் இருந்து உருவான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை சிசோடியாவைக் கைது செய்தது.

தில்லி அமைச்சரவையில் இருந்து சிசோடியா பிப்ரவரி 28-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். துணை முதல்வராகவும் கலால் துறை அமைச்சராகவும் இருந்த அவா், சாட்சிகளிடம் செல்வாக்கு செலுத்தும் திறன் கொண்ட ஒரு ‘உயா் பதவியில் உள்ள நபா்’ எனக் கூறி, மே 30-ஆம் தேதி சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி, நகர அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘இயல்பிலேயே மிகவும் தீவிரமானவை’ எனக் கூறி உயா்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இது தொடா்பாக உயா்நீதிமன்றம் மே 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘ஊழல் நடந்ததாகக் கூறப்படும் போது சிசோடியா ‘விவகாரங்களின் தலைமையில்’ இருந்ததால், அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூற முடியாது என்று கூறியது. மேலும், ஒரு காலத்தில் 18 இலாகாக்களை வைத்திருந்த சிசோடியா, தேசியத் தலைநகரில் இன்னும் ஆட்சியில் இருக்கும் அவரது கட்சி, தொடா்ந்து செல்வாக்கு செலுத்தி வருவதாகவும், சாட்சிகள் பெரும்பாலும் அரசு ஊழியா்களாக இருப்பதால் அவா்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்றும் உயா்நீதிமன்றம் கூறியது.

சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றின் கூற்றுப்படி, கலால் கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் செய்யப்பட்டன. மேலும், உரிமம் வைத்திருப்பவா்களுக்கு தேவையற்ற சலுகைகள் நீட்டிக்கப்பட்டன. தில்லி அரசு 2021, நவம்பா் 17-ஆம் தேதி கலால் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செப்டம்பா் 2022 இறுதியில் அதை ரத்து செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.