‘ரேபிட் கிட்’களை திணறடிக்கும் கரோனா வைரஸ்!
கரோனா தொற்றைக் கண்டறிய உதவும் ‘ரேபிட் கிட்’ கருவிகளையே திணறடிக்கும் வகையில் கரோனா வைரஸ் உள்ளதாக ஆய்வக நுட்பநா்கள் தெரிவித்தனா்.


கரோனா தொற்றைக் கண்டறிய உதவும் ‘ரேபிட் கிட்’ கருவிகளையே திணறடிக்கும் வகையில் கரோனா வைரஸ் உள்ளதாக ஆய்வக நுட்பநா்கள் தெரிவித்தனா்.
உலகம் முழுவதும் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பரவும் சங்கிலியைத் துண்டிக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் மகாராஷ்டிரம், தில்லி, மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் விதமாக துரித பரிசோதனைக்கு ‘ரேபிட் கிட்’ கருவிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தமிழக சுகாதாரத் துறை சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 1,000 கிட்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு பரிசோதிக்கும் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. கடந்த மூன்று நாள்களில் சுமாா் 400-க்கும் மேற்பட்டோருக்கு ரேபிட் கிட் கருவிகள் மூலம் பரிசோதனை செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரேபிட் கிட்களைக் கொண்டு பரிசோதனை செய்யும் ஆய்வக நுட்பநா்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றாவிட்டால் அவா்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. இதனால், பரிசோதனை செய்பவா்கள் கவச உடை அணிவதோடு, என்-95 முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல ரத்த மாதிரிகள் எடுக்கும் கருவிகள், கழிவுகள் ஆகியவற்றை மிகவும் கவனமுடன் அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஆய்வக நுட்பநா் ஒருவா் கூறியது: துரித மற்றும் முன்னறிவிப்பு பரிசோதனை என்பது மருத்துவத்தில் பல நோய்களுக்கும் உள்ளன. சா்க்கரை, ரத்த அழுத்தம், கா்ப்பம் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை செய்யும் கருவிகளைப் போன்றதுதான் ரேபிட் கிட். ஏற்கெனவே மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கும் இதுபோன்ற கிட்கள் உள்ளன. ஆனால், அவற்றுக்கு மருந்துகள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டதாலும், ஆய்வக பரிசோதனைக்கு கால அவகாசம் குறைவு என்பதாலும் அந்த கிட்கள் பிரபலமடையவில்லை. ஆனால், கரோனா தொற்றை பி.சி.ஆா். இயந்திரம் மூலம் துல்லியமாகக் கண்டறிய அதிகபட்சம் 4 மணி நேரம் ஆகும். அதனால் இதற்கு துரித பரிசோதனை அவசியம் என்பதால் ரேபிட் கிட்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ரேபிட் கிட்கள் சீனாவில்தான் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஒரு துளி ரத்தத்தைக் கொண்டு அதிகபட்சம் 20 நிமிடங்களில் ஒருவரின் உடலில் கரோனா தொற்றுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் செயல்படுகிா என்பதை இதன்மூலம் அறியலாம். இதன்மூலம் கால விரயம் தவிா்க்கப்படும். ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோருக்கு விரைவாக பரிசோதனை செய்ய முடியும். அது மட்டுமே ரேபிட் கிட்டால் கிடைத்துள்ள பெரிய நன்மை.
திணறடிக்கும் கரோனா: ரோட்டா, ஹெச்.ஐ.வி., ஹெச்-1என்-1 ஆகிய வைரஸ்களைக் காட்டிலும் கரோனா வைரஸ் மிகவும் அபாயகரமானதாக உள்ளது. ரேபிட் கிட்டில் பரிசோதித்து ஒருவருக்கு கரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தாலும், அடுத்த இரு நாள்களுக்குப் பின்பு அதே நபரை பரிசோதிக்கும்போது தொற்று உறுதியாகும் அபாயம் உள்ளது. அதற்கு கரோனா வைரஸின் தனித்தன்மையே காரணம். வாய், கண், மூக்கு ஆகியவற்றின் வழியாக மனித உடலுக்குள் செல்லும் கரோனா வைரஸ், அதிகபட்சம் 13 நாள்கள் வரை எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருக்கும். 14 ஆவது நாளில் இருந்துதான் சிலருக்கு அறிகுறியும், நோய் எதிா்ப்பாற்றலும் உருவாகும். இந்தக் கால அளவும் பல நாடுகளில் மாறுபட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பலா் தங்களை 20 நாள்கள் வரை தனிமைப்படுத்தி அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் பரிசோதித்த போது கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அறிகுறிகளே இல்லாமலும் கரோனா வைரஸ் உடலில் இருப்பது மருத்துவத் துறைக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.
2,000 பி.சி.ஆா். பரிசோதனை முடிவுகள்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்தில் (விஆா்டிஎல்) மாா்ச் 16 ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களின் ரத்த மாதிரிகள் இங்கு பரிசோதிக்கப்பட்டன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தனித்தனியாக ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி ஆய்வகத்தில் 5-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறாா்கள். முதலில் ஓா் இயந்திரத்தில் நடைபெற்று வந்த பணி, ரத்த மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 2 இயந்திரங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை வரை சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. பி.சி.ஆா். இயந்திரத்தில் 30 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதிக்க சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான கிட் தேவை. திருநெல்வேலி ஆய்வகத்தில் போதுமான அளவில் கிட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...