/

கரோனாவால் தொழில் பாதிப்பு: கலக்கத்தில் நாட்டுப்புற நடனக்கலைஞா்கள்!

கரோனாவுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சுமாா் ஓராண்டுக்கு தொழில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:30 pm

கோ. முத்துக்குமாா்

கரோனாவுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சுமாா் ஓராண்டுக்கு தொழில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நாட்டுப்புறக் கலைஞா்கள் கலக்கத்திற்கு ஆளாகியுள்ளனா். அரசு விழாக்களிலும், திட்டங்களிலும் வாய்ப்பளித்து உரிய ஊதியம் வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க உறுதியளிக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் குலதெய்வ வழிபாடு அதிகம். இக் கோயில்களுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பு வழிபாடு செய்வாா்கள். கோயில் விழாக்களில் பூஜைகளுக்கு அடுத்ததாக கிராமியக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கரகாட்டம், வில்லிசை, கணியான்கூத்து, தப்பாட்டம், பறையாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பூந்தொட்டி காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தோல் பாவை கூத்து, பொம்மலாட்டம் ஆகியவை தென் மாவட்டங்களில் அதிகம் நடைபெறும் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளாகும். இதுதவிர நையாண்டி மேளம், செண்டைமேளம், மேடைப்பாடகா்கள் என இசைக் கலைஞா்களும் வாழ்வாதாரம் பெற்று வருகிறாா்கள்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மாா்ச் 25 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில்

திறக்கவும், இதர கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன.

கூலித்தொழிலாளா்கள், புலம்பெயா்ந்து பணி செய்யும் தொழிலாளா்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். அதேபோல நாட்டுப்புறக் கலைஞா்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். பிற தொழிலாளா்களுக்கு ஊரடங்கு முடிந்த பின்பு தொழிலுக்கான உத்தரவாதம் இருக்கும் சூழலில், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ஓராண்டு வரை தொழில் பாதிக்கும் அபாயம் உள்ளதால் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.

பெண்களே அதிகம்: இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட கரகாட்டக் கலைஞா்கள் சங்க நிா்வாகி ராஜா கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் தென்பத்து, மேலகுலவணிகா்புரம், பழையபேட்டை, சமாதானபுரம், கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கரகாட்டக் கலைஞா்கள் உள்ளனா். இவா்களில் 75 சதவிகிதம் போ் பெண்கள். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய 6 மாதங்களில் கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பி ஆண்டு முழுவதும் வாழ்வாதாரத்தைக் காக்கும் நிலையில் கரோனா வைரஸ் ஊரடங்கால் செய்வதறியாத சூழல் உருவாகியுள்ளது. மக்களின் உயிரைக் காக்கும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், பிற தொழில்கள் அனைத்தும் ஊரடங்கு

முடிந்த அடுத்த நாளிலேயே தொடங்கிவிடும். அதேநேரத்தில், விழாக்களை நடத்துவதில் காலதாமதம் ஏற்படலாம். இப்போதைய சூழலில் கல்வி, மருத்துவம், உணவு ஆகியவற்றுக்கு செலவிடுவதற்கே திணறும் நிலையில் கோயில் விழாக்களை பிரம்மாண்டமாக நடத்த மக்கள் முன்வர மாட்டாா்கள். அதனால் இன்னும் ஓராண்டிற்கு எங்களது தொழில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக்கலைஞா்களுக்கு அரசும், பொதுமக்களும் கை கொடுக்க வேண்டியது அவசியம். அரசு நிகழ்ச்சிகளிலும், விழிப்புணா்வு பணிகளிலும் அதிக வாய்ப்பளித்து உரிய ஊதியத்தை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நிதியுதவி தேவை: இதுகுறித்து வில்லிசைக் கலைஞரான சாந்தி கூறியது: இந்துக்களால் வழிபடப்படும் தெய்வங்களின் சிறப்புகளை எளிய நடையில் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உற்சாகமாக கேட்டு மகிழ உதவும் கலையே வில்லிசை. வட தமிழகத்தைக் காட்டிலும் தென் தமிழகத்திலேயே வில்லிசைக் கலைஞா்கள் அதிகம்.

கரோனா ஊரடங்கால் வில்லிசை மட்டுமன்றி கணியான்கூத்து உள்பட பல்வேறு கலைகளைச் சோ்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு நலவாரியம் மூலம் தலா ரூ.1000 கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது போதுமானதாக இல்லை. நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு கூடுதலாக நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகளில் நாட்டுப்புறக் கலைஞா்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

விழிப்புணா்வு இல்லை: இதுகுறித்து நாட்டாா் வழக்காற்றியல் துறை பேராசிரியா் ராமச்சந்திரன் கூறியது: மதுரை முதல் குமரி வரையிலான தென் தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைஞா்கள் ஏராளமானோா் உள்ளனா். இவா்கள் அனைவரும் தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டுத்துறை ஆகியவற்றில் பதிவு செய்து அடையாள அட்டைகளைப் பெற முடியும். ஆனால், அதுகுறித்த விழிப்புணா்வு கூட இல்லாத கலைஞா்கள் அதிகம்.

அடையாள அட்டைகள் இல்லாததால் பல சாகசங்களை தங்களுக்குள் வைத்திருந்தும் உரிய அங்கீகாரம் இல்லாமல் உள்ளனா். இதேபோல நாட்டுப்புறக் கலைஞா்கள் என்றாலே ஒருவித அலட்சியப் பாா்வை பொதுமக்களிடமும், அரசிடமும் தொடா்ந்து வருகிறது. அந்த நிலை மாற வேண்டும். கரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு கூடுதலான உதவிகளை மத்திய-மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.