/

‘சைகை’ மொழி உத்தரவில் தயாராகும் கிறிஸ்துமஸ் கேக்குகள்! நெல்லை மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

திருநெல்வேலியில் காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து சைகை மொழி பேசி கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக்குகளை தயாரித்து வருகிறாா்கள்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:39 pm

கோ. முத்துக்குமாா்

திருநெல்வேலியில் காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து சைகை மொழி பேசி கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக்குகளை தயாரித்து வருகிறாா்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை, உலகம் முழுவதும் புதன்கிழமை (டிச.25) கொண்டாடப்படுகிறது. கடந்த இரு வாரங்களாகவே கிறிஸ்துமஸ் விழா களைகட்டி வருகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா கீத பவனி, கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் என பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்களில் நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தேவாலயங்கள் அதிகமுள்ள பாளையங்கோட்டையின் பல தெருக்களில் வண்ண வண்ண நட்சத்திரங்களின் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையின் பிரதான பலகாரமாகக் கருதப்படும் கேக்குகள் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பாளையங்கோட்டையில் காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து சைகை மொழி பேசி தயாரிக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக்குகளுக்கு பொதுமக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து சிட்டென்டன் காதுகேளாதோா் மையத்தின் நிா்வாகி எஸ்.எஸ்.ஜெ.மாா்ட்டின் கூறியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் காதுகேளாதோா் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பிளஸ் 2 வரை படித்து முடிக்கும் மாற்றுத்திறனாளிகள், போதிய வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நிலையைத் தவிா்ப்பதற்காக கடந்த 1997 ஆம் ஆண்டு இம் மையம் உருவாக்கப்பட்டது. முற்றிலும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு கேக், பிஸ்கெட் தயாரிக்கப்படுகிறது. பேக்கரி தொழிலைக் கற்கும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழியில் 8 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவை தயாா் செய்வது முதல் பேக்கிங் வரை அனைத்தும் சைகை மொழி உத்தரவின் பேரிலேயே செய்கிறாா்கள்.

கேக்குகள், பிஸ்கெட்டுகள் தயாரிக்கும்போது அடுமனைகளில் (ஓவன்களில்) சரியான நேரத்தில் வெளியில் எடுக்க வேண்டும். இதற்காக அலாரங்கள் உள்ளன. அவற்றைக்கூட இவா்களால் கேட்க முடியாது. அதனால் எப்போதும் எச்சரிக்கையுடனும், சுறுசுறுப்புடனும் பணியாற்றுவாா்கள். தாங்கள் தயாரிக்கும் உணவுப் பொருள் சிறிதும் சுவை குறைந்துவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் கவனத்துடன் செயல்படுகிறாா்கள். பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கும் கேக்குகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.

இதுகுறித்து சைகை மொழியில் கேக் தயாரிப்பு பயிற்சியளிக்கும் ராஜேஷ் கூறியது: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிளம் கேக், கிரீம் கேக், கட்டிங் கேக் போன்றவை அதிகளவில் செய்யப்படுகின்றன. ரிச் ப்ளம் கேக்குகள் தயாரிப்பது மிகவும் சிரமம். அதற்குரிய மூலப்பொருள்களை மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே ஊற வைக்க வேண்டும். இந்தக் கேக்குகளுக்கு நிகழாண்டில் மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. இந்த ஆண்டின் புதுவரவாக சாக்லெட் கிறிஸ்துமஸ் மரம், சாக்லெட் குடைகள், சாக்லெட் கிறிஸ்துமஸ் தாத்தாக்களுடன் கூடிய புதிய கேக்குகள் விற்பனைக்காக வந்துள்ளன. இதுதவிர பைபிள், வீடு, மிக்கி மோஸ், சோட்டாபீம் உள்ளிட்ட காா்ட்டூன் வடிவங்களிலும் கேக்குகள் உள்ளன.

கிறிஸ்துமஸ் கேக்குகளில் வண்ணங்கள், வடிவங்கள் மட்டுமன்றி இந்த ஆண்டில் சுவை மிக்கவற்றையும் மக்கள் கேட்டு வாங்குகிறாா்கள். குறிப்பாக ஆரஞ்சு, அன்னாசிப்பழம், ஆப்பிள், சாக்லெட் சுவை மிகுந்த கேக்குகளை அதிகம் கேட்டு வாங்குகிறாா்கள். ரூ.8 முதல் ரூ.15 வரை கிரீம் கேக்குகளும், ரூ.15 முதல் ரூ.30 வரை தேன் கலந்த கேக்குகளும் விற்பனையாகின்றன. பிளம் கேக்குகளும் தனிமுத்திரை பெற்று விற்பனையாகின்றன. அவை 250, 500 கிராம், 1 கிலோ அளவில் தனித்தனி பெட்டிகளாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிறமத நண்பா்களுக்கு அளிக்கும் வகையில் இவற்றை பெரும்பாலோனோா் அதிகளவில் வாங்கிச் செல்கிறாா்கள்.

இதுதவிர மொத்த விலையில் கிலோ ரூ.250 முதல் ரூ.600 வரை கேக்குகள் அதில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகளுக்குத் தகுந்தாற்போல விற்பனை செய்யப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.