திருநெல்வேலி, மே 1: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய வாக்கு வங்கிகளில் ஒன்றான பீடித் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெறப் போவது யார்? தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சம் பீடித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4.5 லட்சம் பேர் உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் பேர் வரை இருப்பதாகவும் பீடித் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த தொழிலில் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றப்பட்டுள்ளதால் அனைவரும் வாக்குரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் வளமுடன் இருந்த இந்த தொழில் அண்மைக்காலமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அதன் எதிரொலியாக தொழிலாளர்களும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அறிவிக்கும் கூலியை பீடி நிறுவனங்கள் முறையாக வழங்குவதில்லை என்பது நீண்ட காலப் பிரச்னை. அதுமட்டுமன்றி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ வசதி, விடுமுறை உள்ளிட்ட சட்டப்படியான சலுகைகளை வழங்குவதிலும் பிரச்னை இருந்து வருகிறது. ""அரசு அறிவித்துள்ளபடி ஆயிரம் பீடிக்கு ரூ. 78.86 கூலி வழங்க வேண்டும். ஆனால், நிறுவனங்களுடன் நேரடித் தொடர்புள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த கூலி கிடைக்கிறது. ஒப்பந்தக்காரர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ. 45 முதல் 55 வரை மட்டுமே கிடைக்கிறது. கடந்த காலங்களில் அமல்படுத்தப்பட்டு வந்த ஓய்வூதிய திட்டத்தில் ஒருவருக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 250 வரை கிடைத்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள திட்டத்தால் அந்த தொகை ரூ. 5 முதல் 10 வரை குறைந்துள்ளது'' என்கிறார் மாவட்ட பீடித் தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ. சார்பு) பொதுச்செயலர் ஆர். மோகன். இதுமட்டுமன்றி தரமற்ற பீடி இலை வழங்கப்படுவதால் கிடைக்கும் கூலியில் ஒரு பகுதி அதற்காக செலவிட வேண்டிய நிலையும் உள்ளது. இந்த நெருக்கடிகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் பொதுஇடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கும் சட்டம், பீடி கட்டுகளில் மண்டை ஓடு படம் அச்சிடப்பட வேண்டும் என்ற சட்டம் (வரும் ஜூன் மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது) போன்றவை தொழிலின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி வருகின்றன. தேர்தல் வாக்குறுதி: ஒவ்வொரு தேர்தலின்போது அரசியல் கட்சிகளும் சரி, வேட்பாளர்களும் சரி தாராளமாக அள்ளிவிடும் வாக்குறுதிகளுக்கு இடையே "பீடித் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்போம்' என ஒற்றை வரியில் சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால், ஆண்டுகள் பல ஆகியும், பிரச்னையின் "புகைச்சல்' மட்டும் தீர்ந்தபாடில்லை. இந்த தேர்தலிலும் வழக்கம் போலவே, திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பத்தோடு பதினொன்றாக பழைய வாக்குறுதியையே கூறி வருகின்றனர். ""இம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள சுமார் 7 லட்சம் தொழிலாளர்களில் தொழிற்சங்க அமைப்புகளின் கீழ் ஒரு லட்சத்திற்கும் குறைவான தொழிலாளர்களே உள்ளனர். எஞ்சிய பெரும்பான்மை தொழிலாளர்கள் அமைப்பு சாராமல் உள்ளனர். இவர்கள், குடும்ப உறுப்பினர்களின் அரசியல் சார்பு, பொதுவான கருத்தோட்டம், உள்ளூர் அரசியல் சூழ்நிலை போன்றவற்றின் அடிப்படையிலேயே வாக்களித்து வருகின்றனர்'' என்கிறார் மாவட்ட பீடி தொழிலாளர் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி. சார்பு) பொதுச்செயலர் காசிவிஸ்வநாதன். கணிசமான வாக்கு வங்கியாக உள்ள இத் தொழிலாளர்களின் ஆதரவைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்ற நிலையில், அவர்களின் பிரச்னைகளின் தீவிரத்தன்மையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயல்பட எந்த வேட்பாளரும் முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. பீடித் தொழிலாளர்களுக்கு மத்தியில், இடதுசாரி கட்சிகள் மட்டுமே தொழிற்சங்கங்களை நடத்தி வருகின்றனர். இதர தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் வலுவான அமைப்புகள் இல்லை. எனவே, பீடித் தொழிலாளர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு அதற்கு தீர்வுகாணும் உண்மையான அக்கறையுடன் செயல்படும் கட்சியோ, வேட்பாளரோ அவர்களின் இதயத்தில் இடம் பிடிக்க வாய்ப்பு உண்டு. தற்போது இடதுசாரி கட்சிகள் மட்டும் அவரவர் ஆதரவு தளங்களில் வாக்கு கேட்டு வருகின்றனர். இதர தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற எவரும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. தேர்தலில் வெற்றி பெற கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்த துடிக்கும் கட்சியினருக்கு மத்தியில், மாவட்டத்தில் மொத்தம் உள்ள சுமார் 17.86 லட்சம் வாக்காளர்களில் இந்த 7 லட்சம் பீடித் தொழிலாளர் வாக்கு வங்கியைப் பயன்படுத்திக் கொள்ளப் போவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.