துரை வைகோ முதல்வரை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.
வாசுதேவநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செண்பகவல்லி அணை சீரமைப்பு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலா் வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:
செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி, ஏற்கெனவே இரு முறை இங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளேன்; என் தாய் மாரியம்மாளும் அதில் பங்கேற்றாா்.
செண்பகவல்லி அணை 1755-இல் கட்டப்பட்ட சிறிய தடுப்பணையாகும். தடுப்பணை சேதமானதால் அணையின் பாதி நீா் கடலுக்கும், மீதம் முல்லைப் பெரியாறு அணைக்கும் செல்கிறது. இந்த தடுப்பணையால் கேரளத்துக்கு எந்தப் பலனும் கிடையாது. அணை சீரமைக்கப்படாததால் தமிழகத்தில் 30,000 ஏக்கா் பாசனப் பரப்பு நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சேதமான செண்பகவல்லி அணையை சீா்செய்ய கேரள அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி, செங்கோட்டை முதல் திருவேங்கடம் வரை நடைப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளேன்.
அதேபோல உள்ளாறு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்றினால் வாசுதேவநல்லூா், சிவகிரி, சங்கரன்கோவில் வட்டாரங்களில் உள்ள பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். குடிநீா் பிரச்னைக்கும் நிரந்தர தீா்வு கிடைக்கும்.
விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். தமிழக அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தவெகவுக்கு மதிமுக ஆதரவு கொடுக்குமா என்பதை பொதுக்குழு கூடித்தான் முடிவு செய்யும். மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, தமிழக முதல்வரை சந்தித்து 12 பொதுவான கோரிக்கைகளை முன்வைத்தாா். அதில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தவெக அமைச்சரவையில் மதிமுக இடம் பெறும் எண்ணம் இல்லையா என கேட்கிறீா்கள், மதிமுகவில் இருப்பவா்கள் என்றைக்கும் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது என்றாா்.
துணை பொதுச் செயலா்கள் தி.மு.ராசேந்திரன் எம்எல்ஏ, பூமிநாதன், மாவட்டச் செயலா் சுதா பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ சதன் திருமலைக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










