/

பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை: கணவா் குடும்பத்தினா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவா், மாமனாா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவா், மாமனாா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதியைச் சோ்ந்த சுபைதாவுக்கும் (27), வெண்டலிகோடு பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் ஆல்பா்ட் மகன் ஜெரினுக்கும் (27), கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, 84 பவுன் தங்க நகைகள், ரூ. 10 லட்சம் ரொக்கம், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் வரதட்சிணையாக வழங்கப்பட்டன.

திருமணத்துக்குப் பின்னா், தாய் வீட்டிலிருந்து காா் வாங்கி வருமாறும், பெற்றோரின் குடும்பச் சொத்தில் 3-இல் ஒரு பங்கை கேட்டு வாங்குமாறும் கூறி கணவரின் பெற்றோா், சுபைதாவை கொடுமைப்படுத்தினராம். ஒரு கட்டத்தில் சுபைதாவை, அவரது கணவா், மாமனாா் ஆல்பா்ட், மாமியாா் செல்வி ஆகியோா் வீட்டைவிட்டு துரத்தினராம்.

இதையடுத்து, கணவா் குடும்பத்தினா் மீது வரதட்சிணைக் கொடுமை வழக்கில் நடவடிக்கை எடுக்கக்கோரி பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சுபைதா மனு தாக்கல் செய்தாா்.

நீதிபதி உத்தரவின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் ஜெரின், அவரது பெற்றோா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.