/

குழித்துறை மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ரயில் நிலையமான குழித்துறை ரயில் நிலையம் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:23 pm

சி. சுரேஷ்குமார்

கன்னியாகுமரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ரயில் நிலையமான குழித்துறை ரயில் நிலையம் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழித்துறை ரயில் நிலையம், விளவங்கோடு, கல்குளம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களின் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக உள்ளது. இந்த ரயில் நிலையம் 72 கி.மீ. தொலைவு கொண்ட நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக அண்டை மாநிலமான கேரளத்துக்கு 14 ரயில்களும், அண்டை மாவட்டமான திருநெல்வேலிக்கு 3 ரயில்களும் இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாகவும், திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளம் வழியாகவும் அதிக ரயில்கள் இயக்கப்படுகிறது. நாகர்கோவில், திருவனந்தபுரம் பகுதிகளிலிருந்து இயக்கப்படும் ரயில்களை நீட்டிப்பு செய்ய அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் நாகர்கோவில், திருவனந்தபுரம் ரயில் நிலையங்களின் மையப் பகுதியில் அமைந்துள்ள குழித்துறை ரயில் நிலையம் வளர்ச்சி இன்றியும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, தற்போதைய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தனது தேர்தல் அறிக்கையில் குழித்துறையிலிருந்து புறப்படும் வகையில் ரயில்கள் இயக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். குழித்துறையிலிருந்து ரயில்கள் புறப்படாவிட்டாலும், நாகர்கோவிலில் இருந்து தமிழக பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களில் சில ரயில்களை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்கினால் விளவங்கோடு, கல்குளம் வட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவியாக இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கூடுதல் ரயில்கள்: நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தினசரி 6 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் 2 ரயில்கள் அலுவல் நேரத்துக்கு இயக்கப்படுகிறது. இதே போன்று அண்டை மாவட்டமான திருநெல்வேலிக்கு அலுவல் நேரத்துக்கு செல்லும் வகையில் திருவனந்தபுரத்திலிருந்து இரண்டு ரயில்களை இயக்கினால் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே திருவனந்தபுரம் - நாகர்கோவில் மார்க்கத்தில் இயங்கி வரும் ரயில்களில் ஒருசில ரயில்களை திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பகல் நேரத்தில் செல்ல ரயில் வசதி கிடைக்கும் என்று இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து குழித்துறை ரயில்வே பயணியர் சங்க செயலர் பி. பென் ஜேக்கப் சிங் கூறியதாவது:
கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் திருவனந்தபுரம் - மங்களூரு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்துவிட்டு, நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது. இந்த இரு ரயில்களின் காலி பெட்டிகள் காலை முதல் மாலை வரை காலியாகவே நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த ரயில்களை நீட்டிப்பு செய்து இயக்கினால் குழித்துறை ரயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த நீட்டிப்புக்கு கூடுதலாக எந்த ஒரு வசதியும் ரயில்வே துறைக்கு தேவைப்படாது.
இது தவிர கொச்சுவேலியில் இருந்து வேளாங்கண்ணிக்கு குழித்துறை வழியாக ரயில் இயக்க வேண்டும். இந்த ரயில் நிலையத்தில் தற்போது மங்களூரு - நாகர்கோவில் ஏரநாடு ரயில், கன்னியாகுமரி -ஸ்ரீமாதா வைஷ்ணதேவி கத்ரா வாராந்திர ரயில் ஆகியவை தாற்காலிகமாக நின்று செல்கிறது. இந்த ரயில்கள் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும். மேலும் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் கன்னியாகுமரி - ராமேஸ்வரம், கன்னியாகுமரி - புதுச்சேரி ரயில்கள் விளவங்கோடு, கல்குளம் வட்டத்தைச் சேர்ந்த பயணியர் நேரடியாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த ரயில்களில் பயணிக்க ஆட்டோ அல்லது அரசுப் பேருந்தில் அதிக செலவு செய்து நாகர்கோவில் சென்று தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில்களை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்கினால், குமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெற முடியும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.