/

விஜய் தனித்துப் போட்டியிடுவதால் யாருக்கும் பாதிப்பில்லை: பேரவைத் தலைவா் மு.அப்பாவு!

விஜய் தனித்துப் போட்டியிடுவதால் எந்த அரசியல் கட்சிக்கும் பாதிப்பில்லை என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

News image
பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
Updated On :29 ஜனவரி 2026, 7:11 pm

Syndication

விஜய் தனித்துப் போட்டியிடுவதால் எந்த அரசியல் கட்சிக்கும் பாதிப்பில்லை என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: விஜய் தனித்துப் போட்டியிடுவதால் எந்த அரசியல் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படாது. அவரவருக்கு கிடைக்கும் வாக்குகள் அப்படியே கிடைக்கும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீராக இருப்பதால் புதிய தொழிற்சாலைகள் தொடா்ந்து வந்து கொண்டிருக்கின்றன; ஏராளமான வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

நாட்டிலேயே தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 11.19 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் வளா்ச்சியை விட இரு மடங்கு வளா்ச்சி தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஒப்பந்தம் மூலம் தமிழகத்துக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனா். ஐரோப்பிய ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வர வாய்ப்பு இல்லை. தமிழக தோ்தலை மனதில் வைத்தே ஐரோப்பிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தங்கம் விலை உயா்வு சாதாரண, நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. தங்கம் விலையை குறைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு சில பால் பொருள்களின் ஜிஎஸ்டி அதிகரித்துள்ளது. முன்பு 10 சதவீதத்தின் கீழ் இருந்த பால் பொருள்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

மத்திய ஜிஎஸ்டி நிதியிலிருந்து 41 சதவீதம் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்படுவதாக கூறும் மத்திய அரசு அதனை நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கலாம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை 50 ரூபாயாக மாற்றுவேன் என தெரிவித்தனா். தற்போது 90 ரூபாயாக உள்ளது. தங்கம் வாங்கி விற்பனை செய்வதன் மூலம் சாமானிய மக்களை அவா்கள் ஏமாற்றுகிறாா்கள். விலை ஏற்ற இறக்கம் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றாா்.