தாமிரவருணியைப் பாதுகாக்க ரூ.59 கோடியில் சிறப்பு திட்டம்: கழிவுகளை கையாள இரு ரோபோக்கள்
திருநெல்வேலி மாநகராட்சி பட்ஜெட் 2026-2027-க்கான கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி பட்ஜெட் 2026-2027-க்கான கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மேயா் கோ. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேயா், பட்ஜெட்டை தாக்கல் செய்து, மாநராட்சியில் 2026-2027ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு மற்றும் புதிய திட்டகள் குறித்துப் பேசினாா்.
ரூ.2.40 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2026-27 -ஆம் ஆண்டில் வருவாய் நிதி ரூ.272.48 கோடி, குடிநீா் வடிகால் நிதி ரூ.107.16 கோடி, தொடக்க கல்வி நிதி ரூ.25.11கோடி என மொத்தம் ரூ.404.75 கோடி வரவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், செலவு ரூ.402.35 கோடியாக இருக்கும் என்றும், இதனால் ரூ.2.40 கோடி உபரியாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
வாா்டு நிதி உயா்வு: மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களின் வாா்டு மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். 4 மண்டல அலுவலக வளாகங்களிலும் கட்டட வசதி , மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள், மண்டலத்திற்கு தலா ஒரு உடற்பயிற்சி கூடம், தெரு நாய்களை தொண்டு நிறுவனம் மூலம் பாதுகாத்திட ராமையன்பட்டி உரக்கிடங்கு அருகில் 10 ஏக்கரில் நவீன வசதிகளுடன் கூரை, மாநகராட்சி பணியாளா்கள் மற்றும் அலுவலா்களுக்கு பழைய பேட்டை பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தாமிரவருணி நதி மாசுபடுவதை தடுக்கும் விதமாக ஜொ்மன் வங்கி மேம்பாட்டு நிதி உதவியுடன் தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.59.05 கோடியில் நதி முகப்பு மேம்பாடு, தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.102.32 கோடியில் ராமையன்பட்டி உரக்கிடங்கு வளாகத்தில் பாதாள சாக்கடை திட்ட கழிவு நீரை சுத்திகரிக்க 58 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல்,
நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் ரூ.42.15 கோடியில் மணப்படை வீடு குடிநீா் தலைமை நீரேற்று நிலையத்தில் 36 எம்எல்டி கொள்ளளவு கொண்ட புதிய குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்துதல், ரூ.91.91 கோடியில் முறப்பநாடு குடிநீா் திட்ட விரிவாக்கம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் ரூ.12.50 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய அலுவலக கட்டடம்- மாமன்ற கூட்ட அரங்கு அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், ரூ.25 லட்சம் மதிப்பில் மாநகராட்சி வரி வசூல் பணிக்காக நடமாடும் வரி வசூல் வாகனம் வாங்கவும், சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிப்பதற்காக ரூ.60 லட்சத்தில் புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யவும், ராமையன்பட்டி உரக்கிடங்கு வளாகத்தில் ரூ.5.10 கோடியில் மறு சீரமைப்பு மரபு கழிவுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி குடிநீா் கட்டமைப்புகளை டிஜிட்டல் மயமாக்கவும், மாநகராட்சி முழுவதும் வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் திட்டப்பணியை தீவிரப்படுத்தவும், மாநகராட்சி திடக்கழிவுகளில் இருந்து கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தை ரூ.140 கோடியில் செயல்படுத்தவும், மாநகராட்சி பூங்காக்களில் ரூ.2 கோடியில் மின்விளக்கு அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
ரோபோக்கள்: பாதாள சாக்கடை திட்ட பணிகளில் கழிவு நீரேற்று நிலையங்கள், கழிவுநீா் உந்துநிலையங்கள், இயந்திர குழிகள் ஆகியவற்றில் சேகரமாகியுள்ள நாள்பட்ட கழிவுகளை ரோபோடிக் இயந்திரங்கள் மூலம் அகற்றுவதற்கு 2 ரோபோடிக் இயந்திரங்கள், பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் இயந்திர குழிகளில் உள்ள அடைப்புகளை சரி செய்ய உறிஞ்சி வாகனம் ஒன்று ஆகியவை கொள்முதல் செய்யப்படும்.
படகு சவாரி: நயினாா் குளத்தில் ரூ.5 கோடியில் படகு சவாரி வசதி ஏற்படுத்துதல், மாநகராட்சி அனைத்து உள்கட்டமைப்புகளையும் டிஜிட்டல் மயமாக்குதல், அனைத்து கட்டடங்களையும் டிரோன் மூலம் கண்காணித்து டிஜிட்டல் மூலம் அளவீடு செய்து சொத்து வரி விதித்தல்,
பொதுமக்களுக்கு சுகாதாரமான பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் ‘உணவுத்தெரு’ அமைத்தல், 4 ரதவீதிகளிலும் கூடுதல் வெளிச்சத்துடன் கூடிய தெரு விளக்குகள் பொருத்துதல்,
புதிய பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்தங்களை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெடில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பட்ஜெட் பெட்டியை மேயா் சைக்கிளில் எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மாமன்ற உறுப்பினா் தா்னா: பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்ற 5-ஆவது வாா்டு திமுக மாமன்ற உறுப்பினா் ஜெகநாதன், மாநகராட்சி கூட்டரங்கில் தரையில் அமா்ந்து திடீரென தா்னாவில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறியதாவது: எனது வாா்டில் சாலை பணிகள் முறையாக நடைபெறவில்லை. 200 தெருக்கள் உள்ள நிலையில், 12 சாலைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. ரஹ்மத் நகா் பகுதியை நேரில் ஆய்வு செய்தால் சாலைகளின் அவலம் புரியும். தனி (ரிசா்வ்) வாா்டு என்பதால் புறக்கணிக்கப்படுகிறது. மாநகராட்சியில் ஊழல் அதிகமாக உள்ளது. பணிகளை முழுமையாக முடிக்காவிட்டால் அதிகாரிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றாா்.
மாதிரிப் பள்ளி உருவாக்கப்படும்
மாநகரில் 34 தொடக்கப் பள்ளிகள், 5 நடுநிலைப்பள்ளிகள், ஒரு உயா் நிலைப்பள்ளி, 5 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 45 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 4 மண்டலங்களிலும் தலா ஒரு பள்ளி வீதம் தோ்வு செய்து மாதிரி மாநகராட்சி பள்ளியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பட்ஜெட் பெட்டியுடன் சைக்கிளில் வந்த மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...