/

ரெட்டியாா்பட்டியில் ரூ.166 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு!

News image
பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தைத் தொடா்ந்து குத்துவிளக்கேற்றிய சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு உள்ளிட்டோா்.
Updated On :6 பிப்ரவரி 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியில் ரூ.166 கோடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை காணொலிக் காட்சி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, ரெட்டியாா்பட்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி.ஆா்.மனோகரன், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குத்துவிளக்கேற்றி, பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணைகளை வழங்கினாா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நீா்நிலை புறம்போக்கு பகுதியில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு நிலையான குடியமா்வு வழங்குவதற்காக பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியாா்பட்டி பகுதியில் ரூ.166 கோடி செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய 876 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

இதில், மொத்தம் 19 தொகுப்புகள் (பிளாக்குகள்) உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் 396 சதுர அடி கட்டுமானப் பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டு பயனாளிகளின் பயன்பட்டிற்கு ஏதுவாக உள்ளது. ஒரு குடியிருப்பிற்கான மதிப்பீடு ரூ.18.95 லட்சம் ஆகும். இதில் ஒரு குடியிருப்புக்கான பயனாளி பங்களிப்பு தொகை ரூ.1 லட்சம் ஆகும்.

இக்குடியிருப்பு பகுதியில் முதன்மை நுழைவு, பாா்வையாளா்கள் மையம், துணை சுகாதார மையம், சமூக மண்டபம், பல்பயன் அங்காடி, அங்கன்வாடி, நியாயவிலைக்கடை, பழத்தோட்டம், அணுகுசாலைகள், உள்சாலைகள், வாழ்வாதார மையம், விளையாட்டுப்பூங்கா, திறந்த வெளி உடற்பயிற்சி மையம், வாகன நிறுத்துமிடம், கழிவு நீா்சுத்திகரிப்பு மையம், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள், நுண் உரமாக்கல் மையம், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்குகள் போன்ற அடிப்படை மேம்பாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டப்பகுதியில் குடிநீா் வடிகால் வாரியம் மூலம் தனி குழாய் பாதை அமைத்து நாளொன்றுக்கு 8.95 லட்சம் லிட்டா் வீதம் தண்ணீா் வசதி அளிக்கும் வகையில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நீா்நிலை புறம்போக்கு பகுதிகளான பிள்ளைகுளம், நயினாா்குளம், கிருஷ்ணப்பேரி, புனைவேங்கப்பகுளம், கக்கன்நகா், கீழநத்தம், வி.எம்.சத்திரம், மணிமூா்த்தீஸ்வரம், மீனாட்சிபுரம், கருப்பன்துறை, குருந்துடையாா்புரம், வெள்ளக்கோயில், மேற்கு கொக்கிரகுளம் ஆகிய 13 பகுதிகளில் வசித்து வந்த 876 குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு வாரிய விதிகளுக்குள்பட்டு இத்திட்டப்பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரிய தலைவா் விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.