/

அதிகக் கட்டணம் வசூலிக்கும் கேஸ் நிறுவனங்கள்

திருநெல்வேலி, ஜூலை 5: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கேஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.  நாடு முழுவதும் கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் ச

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:05 pm

தி. இன்பராஜ்

திருநெல்வேலி, ஜூலை 5: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கேஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

 நாடு முழுவதும் கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் சமையல் கேஸ் சிலிண்டர்  ஒன்றுக்கு ரூ.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.3-ம், மண்ணெண்ணைய் லிட்டருக்கு ரூ.2-ம் உயர்த்தப்பட்டது.

 இந்த விலையேற்றத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சமையல்  கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டதற்கு நடுத்தர மக்களிடம் இருந்து  எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 பல்வேறு அரசியல் கட்சியினர் சமையல் கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்களும் நடத்தினர்.

 மேலும், மேற்குவங்கத்தில் குறைக்கப்பட்டதுபோல, தமிழகத்தில் சமையல் கேஸ்  மீதான வரியைக் குறைக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.  இதையடுத்து, சமையல் கேஸ் மீது விதிக்கப்பட்டு வந்த 4 சதவீத மதிப்புக் கூட்டு  வரியை ஜூலை 1-ம் தேதி முதல் ரத்துசெய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

 இதையடுத்து, தமிழகத்தில் ரூ.404.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு  சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.15 வரை குறைந்துள்ளது. இருப்பினும், வழக்கத்தைவிட கூடுதல் கட்டணத்தை சில கேஸ் நிறுவனங்கள் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 ஒரு கேஸ் சிலிண்டர் ரூ.389.67-க்கு விற்பனை செய்யப்படும் என்பதோடு, இனி  வரும் காலத்திலும் சமையல் எரிவாயு மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட மாட்டாது என்பது தமிழக அரசின் உத்தரவு.

 ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் சில கேஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் ரூ.420 முதல் ரூ.450 வரை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின்  உத்தரவை இந்த கேஸ் நிறுவனங்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

 மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளதே என யாரேனும் கேஸ் நிறுவன முகவர்களிடம் கேள்வி எழுப்பினால் அவர்களிடம் இருந்து சரியான பதில் வருவதில்லை. விலை  உயர்வை ஒரே நாளில் அமல்படுத்தும் இந்த முகவர்கள் "வாட்' வரி குறைப்பு  தொடர்பாக எந்த பதிலையும் சரியாக தெரிவிப்பதில்லை. மீறி யாரேனும் கேள்வி  எழுப்பினால் அவர்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

 இதுதவிர, போக்குவரத்துக் கட்டணம் என்ற பெயரில் கேஸ் நிறுவன முகவர்கள்  வழக்கத்தைவிட கூடுதலாக ரூ.50 வசூல் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி கேஸ் நிறுவன ஊழியர்களிடம் கேள்வி கேட்போருக்கும் உரிய பதில் கிடைப்பதில்லை.

 கேஸ் விநியோகிக்கும் நிறுவனத்தின் கிடங்கில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு  மேல் உள்ள இடங்களுக்கு மட்டுமே போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்க வேண்டும்  என விதிமுறை உள்ளது.

 இருப்பினும், விதிமுறையை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் கேஸ் நிறுவனங்கள்  பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.  இருப்பினும், அதிகக் கட்டணம் வசூலிக்கும் கேஸ் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 இதுதொடர்பாக கேஸ் நிறுவன முகவர்கள் சிலரிடம் விசாரித்தபோது, "டீசல் விலை  உயர்வு காரணமாக போக்குவரத்துச் செலவு அதிகமாகிறது. விதிமுறைப்படி 5 கிலோ  மீட்டர் சுற்றளவுக்கு மேல் இருப்பவர்களிடம் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரித்து வாங்க வேண்டும் என்பதால், அனைத்துத் தரப்பினரிடமும் பொதுவாக குறிப்பிட்ட அளவு கட்டணத்தை உயர்த்தி வாங்குகிறோம்' என்கின்றனர்.

 குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் பல கேஸ் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காமல்,  ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக கேஸ் முகவர்களுக்கு அனுமதி வழங்கினால்  மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் போக்குவரத்துக் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் நுகர்வோர் அமைப்பினர்.

 எனவே, அதிகக் கட்டணம் வசூலிக்கும் கேஸ் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.