சிறைக் கைதிகள் போராட்டம்: "உள்ளே' நடப்பது என்ன?
திருநெல்வேலி, அக். 29: பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதிகளின் திடீர் போராட்டத்துக்கு சிறப்பு காவல் படையினர் மீது அவர்கள் மட்டுமன்றி சிறையில் உள்ள சில அதிகாரிகளும், காவலர்களும் கொண்டுள்ள அதிருப்தியே முக


திருநெல்வேலி, அக். 29: பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதிகளின் திடீர் போராட்டத்துக்கு சிறப்பு காவல் படையினர் மீது அவர்கள் மட்டுமன்றி சிறையில் உள்ள சில அதிகாரிகளும், காவலர்களும் கொண்டுள்ள அதிருப்தியே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
சிறைக்குள் இதுவரையில் விதிமுறையை மீறி கொண்டு செல்லப்பட்ட பொருள்கள் மூலம் அவர்கள் பெற்று வந்த "ஆதாயம்' இப்போது சிறப்பு காவல் படையினரின் கடுமையான சோதனையால் தடைபட்டுள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
பழமையான இந்த சிறைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பீடி உள்ளிட்ட பொருள்கள் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
சிறையில் கைதிகளைப் பார்க்க வரும் அவரது உறவினர்கள் மற்றும் சிறையில் உள்ள சில காவலர்களின் உதவியுடன் இந்த பொருள்கள் கைதிகளின் கைக்கு செல்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு சிறை வாசலில் சோதனைப் பணியில் இருக்கும் சில காவலர்களும், சில அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உண்டு.
சிறைக்குள் இருக்கும் "செல்வாக்குள்ள' கைதிகளும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த கைதிகளும் சிறையின் உணவை உண்ணாமல் தாங்களே தனியாக சமைத்து உண்பதாகவும், மற்றவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. அதற்கான அரிசி, பருப்பு, இறைச்சி, கோதுமை மாவு, காய்கறிகள் போன்ற உணவுப் பொருள்களும் சிறைக் காவலர்கள் சிலர் மூலம் தனியாக கொள்முதல் செய்யப்பட்டு கைதிகளுக்கு இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அதில் கிடைக்கும் லாபத்தை காவலர் முதல் அதிகாரிகள் வரை பங்கிட்டு கொள்வர் என்று சிறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த முறைகேடுகளை தடுக்க சோதனைப் பணியில் சிறைக் காவலர்களை தவிர்த்து உள்ளூர் சட்டம்-ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவலர்களைக் கொண்டு சோதனை செய்யும் நடைமுறை கடந்த 20-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த சோதனைக்கு கைதிகளை பார்க்க வரும் அவர்களது உறவினர்கள் மட்டுமின்றி, சிறைக்குள் செல்லும் சிறைக் காவலர்களும், ஊழியர்களும் உட்படுத்தப்பட்டனர். இப்பணியில் ஒரு எஸ்.ஐ. தலைமையில் 2 தலைமைக் காவலர்கள், ஆயுதப்படையைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண் காவலர், ஒரு வெடிகுண்டு நிபுணர் என மொத்தம் 6 பேர் இரண்டு "ஷிப்டு'களில் 24 மணி நேரமும் பணியில் இருந்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த புதிய நடைமுறையால் சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்களின் புழக்கம் பெரிதும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறைக்குள் செல்லும் உணவுப் பொருள்களுக்கு சிறைக் கண்காணிப்பாளரின் எழுத்துப்பூர்வமான அனுமதி இருந்தால் மட்டுமே அவற்றை உள்ளே அனுமதிக்க முடியும் என்றும் கறாராக கூறிவிட்டனர். இதனால் "தனிச் சமையல்' செய்வோருக்கான உணவுப் பொருள்களின் விற்பனையும், அதனால் கிடைக்கக் கூடிய ஆதாயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சிறைக்குள் உணவுப் பொருள்களை கொண்டு செல்வதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இரட்டிப்பு ஆதாயம். ஒன்று, பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பதால் கிடைக்கும் வருமானம். மற்றொன்று, தனியாக சமைத்து உண்போருக்கு சிறை நிர்வாகம் உணவு அளிக்க வேண்டியது இல்லை. கைதிகளுக்காக தயாரிக்க வேண்டிய உணவின் அளவு குறைவதால் கிடைக்கும் செலவு மிச்சம் கூடுதல் வருமானம். இந்த வருமானம் மாதந்தோறும் பல லட்சம் ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சிறப்பு காவல் படையினரின் சோதனையால் இந்த வருமானங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தடைபட்டுள்ளதாக அந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.
""சிறப்பு படையினரின் சோதனையால், சிறைக்குள் விதிமுறையை மீறிய செயல்களில் ஈடுபட்டு வரும் கைதிகளுக்கு மட்டுமே பாதிப்பு. ஆனால், பெரிய பாதிப்பு என்பது தவறு செய்யும் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும்தான். கைதிகளை பார்க்க வரும் பெண்களை சிறப்பு படையினர் ஆட்சேபத்திற்குரிய வகையில் சோதனை செய்வதாக கைதிகள் கூறுவதும் ஏற்புடையதல்ல. பெண்களை சோதனை செய்ய பெண் காவலர்கள் உள்ளனர். எனவே, இந்த காரணங்களைக்காட்டி சிறப்பு படையினரின் சோதனை முறையை முழுமையாக நீக்க வேண்டும் என்பதுதான் தவறு செய்து வரும் சில அதிகாரிகள் மற்றும் காவலர்களின் நோக்கம். அதற்கு கைதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாலே சிறை நிர்வாகம் சீர்பட்டுவிடும்'' என்பது நேர்மையான சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் கருத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...