ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

28 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டம் எட்டையபுரத்தில் பாரதி கலையரங்கு

கோவில்பட்டி, அக். 4: தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பாரதி மணிமண்டபத்துக்குப் பின்புறம், அரசால் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பாரதி கலையரங்கு கட்ட வேண்டுமென, பாரதி அன்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் க

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:46 pm

ரா. சர​வ​ண​முத்து

கோவில்பட்டி, அக். 4: தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பாரதி மணிமண்டபத்துக்குப் பின்புறம், அரசால் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பாரதி கலையரங்கு கட்ட வேண்டுமென, பாரதி அன்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பாரதிக்குப் புகழ் சேர்க்கும் வகையில் அவர் பிறந்த ஊரான எட்டையபுரத்தில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அங்கு பாரதி வாழ்ந்த இல்லத்தை அரசே ஏற்று பராமரித்து வருகிறது.

  மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா 1982-ம் ஆண்டு எட்டையபுரத்தில் நடைபெற்றது. அப்போது, அங்கு கூட்டுறவு நூற்பாலை, மகளிர் பாலிடெக்னிக், பெண்கள் உயர்நிலைப் பள்ளி, உமறுப்புலவர் நினைவு நூலகம், பாரதி கலையரங்கு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

   அறிவிக்கப்பட்ட அத் திட்டங்களை நிறைவேற்ற அப்போதைய கோவில்பட்டி எம்எல்ஏ அழகர்சாமி பெருமுயற்சி எடுத்தார்.

 பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக், பெண்கள் உயர்நிலைப் பள்ளி, பாரதி கூட்டுறவு நூற்பாலை, உமறுப்புலவர் நினைவு நூலகம் ஆகியன அமைக்கப்பட்டு, செயல்படுகின்றன.

  ஆனால், கலையரங்கு இன்றுவரை அமைக்கப்படவில்லை. கலையரங்கு அமைக்க பாரதி மணிமண்டபத்துக்குப் பின்புறம் 10 ஏக்கர் 14 சென்ட் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது.

  இந் நிலத்தின் ஒரு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் கட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது. எஞ்சிய சுமார் 8 ஏக்கர் நிலம் வேலிக்கருவை மரங்கள், முள்புதர்கள் வளர்ந்து காடுபோலக் காணப்படுகிறது.

அந் நிலத்தைச் சுற்றிலும் கதவுடன் கூடிய சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.       

  அந்த நிலத்தில் கலையரங்கு அமைத்து, பாரதியின் வாழ்க்கை மற்றும் அவருடன் தொடர்புடைய விடுதலைப் போராட்ட தியாகிகள், நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் முறையில் கலையரங்கை நிர்மாணிக்க அரசு திட்டமிட்டது.

இது தொடர்பாக மத்திய அரசிடம் நிதியுதவி  கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  பாரதி நூற்றாண்டு விழா முடிந்து 28 ஆண்டுகளாகியும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கலையரங்கு கட்டப்படவில்லை. மாறாக வட்டாட்சியர் அலுவலகமும், வட்டாட்சியர் குடியிருப்பும் கட்டப்பட்டுள்ளன.

  மீதியுள்ள இடத்திலாவது பாரதி கலையரங்கு கட்ட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாரதி அன்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.

  இது குறித்து, பாரதி ஆய்வாளர் இளசை மணியன் கூறுகையில், அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பாரதி கலையரங்கம் கட்டப்பட்டு அங்கு பாரதி குறித்த ஒலி-ஒளிக் காட்சிகள் திரையிட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால், பாரதி பிறந்த ஊரான எட்டையபுரத்தைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.