மண் கொள்ளையால் மெல்ல மறைகிறது ஒரு மலை!
திருநெல்வேலி, மே 17: தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக இயற்கை வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருவது ஒன்றும் புதிய செய்தி இல்லைதான். ஆனாலும், ஒரு மலையே நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்கப்பட்டு வருவதும், அத


திருநெல்வேலி, மே 17: தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக இயற்கை வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருவது ஒன்றும் புதிய செய்தி இல்லைதான். ஆனாலும், ஒரு மலையே நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்கப்பட்டு வருவதும், அதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் தொடங்கி கிழக்கே முத்தூர் வரையில் 7 மலைக் குன்றுகள் வரிசையாக உள்ளன. இவற்றை சிவந்திபட்டி மலை என கூறுவர். இந்த மலையின் வடக்குப் பக்கத்தில் ஒரு பகுதி திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குள்ளும், தெற்குப் பகுதி ரெட்டியார்பட்டி கிராம ஊராட்சி எல்லைக்குள்ளும் உள்ளது. கிழக்கே செல்ல செல்ல அவை அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளின் எல்லைகளுக்குள் உள்ளன.
இந்த மலையின் வடக்குப் பகுதியில் திருமால்நகர், ராணி நகர், ராமலிங்கநகர் உள்ளிட்ட விரிவாக்கப் பகுதிகளில் சுமார் 500 வீடுகள் உள்ளன. மேலும், மலையின் மேற்குப் பக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் தலா ரூ. 2.20 லட்சம் செலவில் 306 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இம் மாவட்டத்தில் நீர்வழி புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியுள்ளவர்களை அங்கிருந்து அகற்றி இந்த வீடுகளில் குடியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது மற்றும் இரண்டாவது குன்றுகளுக்கு இடையே தனியார் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏராளமான வீட்டு மனைகளும் கட்டுமானப் பணிகளுக்குத் தயாராக உள்ளன.
இத்தகைய மலைப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவும், பகலும் பெரிய பெரிய குழிகளை வெட்டி சரளை மண்ணை லாரிகளில் அள்ளிச் செல்கின்றனர். திருநெல்வேலி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்தில் தொடங்கி கே.டி.சி. நகர் வழியாக செல்லும் புதிய நான்கு வழிச்சாலையானது இங்குள்ள ஐந்தாவது மலைக் குன்றை கடந்து திருவனந்தபுரம் சாலையை சென்றடைகிறது. அந்த சாலைப் பணிகளுக்காக சிவந்திப்பட்டி மலைக் குன்றுகளை வெட்டி மண்ணை கொண்டு சென்று பயன்படுத்தி வந்தனர். அதோடு, வேறு சில ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற நபர்களும் தங்களுக்கு தேவையான அளவுக்கு லாரிகளில் இங்கிருந்து மண்ணை அள்ளிச் சென்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு அந்த மலைப் பகுதியில் மண் வெட்டி அள்ளப்பட்ட இடம் சுமார் 100 ஏக்கர் வரை இருக்கும்.
சாதாரணமாக ஒரு கிராமத்து நபர் தனது சொந்த உபயோகத்திற்கு ஒரு வண்டி மண்ணை அள்ளிச் சென்றால் ஓடிச் சென்று பிடித்து அபராதம் போட்டு வசூல் செய்யும் வருவாய்த்துறையும் சரி, கனிம வளத்துறையும் சரி கடந்த 2 ஆண்டுகளாக இந்த மண் கொள்ளையை தடுத்ததாகத் தெரியவில்லை.
""நான்கு வழிச் சாலைப் பணிக்காக அரியகுளம், கீழநத்தம், ராஜகோபாலபுரம், உத்தமபாண்டியன்குளம், பரப்பகுளம் ஆகிய இடங்களில் மண் எடுத்துக் கொள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த எல்லைகளுக்குள் இந்த மலைப் பகுதி வருகிறதா என்பதை பார்க்க வேண்டும்'' என்றார் உதவி இயக்குநர் (கனிம வளம்) மோகன சுந்தரம். மேலும், இரவு நேர ரோந்து செல்வோரை இனிமேல் அந்த மலைப் பகுதிக்கும் சென்று வர உத்தரவிட்டுள்ளதாக அவர் திங்கள்கிழமை தெரிவித்தார். எனவே, இதுவரையில் கண்காணிப்பு இல்லை என்பது தெளிவாகிறது.
மண் அள்ள அனுமதிக்கப்பட்ட இடங்கள் தொலைவில் இருந்தால் போக்குவரத்து செலவை மிச்சப்படுத்த சில ஒப்பந்தக்காரர்கள் அருகில் இருக்கும் இந்த இடங்களில் சட்டவிரோதமாக மண்ணை வெட்டி அள்ளிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
நான்கு வழி சாலைப் பணிகள் முடிவடைந்து விட்டன. கடந்த 10 நாள்களாக மண் அள்ள அதிகமான லாரிகள் வரவில்லை. அடுத்து வேறு எங்கேனும் பணி தொடங்கப்பட்டால் லாரிகள் மீண்டும் மண் அள்ள வரலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
முன்னர் குடியிருப்புகளுக்கு சற்று தொலைவில் மண் அள்ளப்பட்டதால் எவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் நாளடைவில் குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளிலும், வீட்டுமனைகளுக்கு அருகிலேயும் மண் அள்ளப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் வருவாய்த் துறையினரிடம் புகார் தெரிவித்தனர். ஓருரி நாள்கள் ஓய்ந்து பின் மீண்டும் தொடங்கும் நிலையே இருந்து வருகிறது. தொடர்ந்து மண் அள்ளப்பட்டுள்ளதால் அங்கு தற்போது பெரிய, பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன.
இரவு நேரங்களில் லாரிகளில் வந்து மண் அள்ளுவோரால் அந்தப் பகுதியில் தேவைற்ற பீதி ஏற்படுவதோடு, அமைதியும் கெடுவதாக அந்தப் பகுதியில் புதிதாக வீடு கட்டி குடியேறி இருப்பவர்கள் தெரிவித்தனர். புறநகர் பகுதியாக இருப்பதால் சட்டவிரோதமாக மண் அள்ளுவோரை தட்டிக் கேட்கவும் எவருக்கும் தைரியம் வருவதில்லை.
குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடங்களுக்கு பின்புறத்தில் கூட பெருமளவு மண் அள்ளப்பட்டுள்ளது. அதை நேரில் பார்த்த வாரியத்தின் அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எனினும், அந்தப் பகுதியில் முடிந்தவரை மண்ணை அள்ளிவிட்டுதான் விட்டு சென்றுள்ளனர்.
""இங்கே இருந்த 7 குன்றுகளில் குழிவெட்டி மண் அள்ளப்பட்டதால் இப்போது 2 குன்றுகள் காலியாகி விட்டன.
ஐந்தாவது குன்றை குடைந்து சாலை அமைத்து விட்டனர். எஞ்சி இருப்பது நான்கு குன்றுகள் மட்டுமே.
இப்படியே மண்ணை அள்ளிக் கொண்டு போனால் அடுத்த சில ஆண்டுகளில் நான்கு குன்றுகளும் காணாமல் போய்விடும்'' என்றார் அந்தப் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி ஒருவர்.
மலைப் பகுதியில் வரைமுறை இல்லாமல் மண்ணை அள்ளுவதாலும், அங்கு பெரிய, பெரிய குழிகள் ஏற்படுவதாலும் இயற்கை சூழல் பாதிக்கப்படும்.
கட்டுமானங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம். அதுமட்டுமின்றி பொதுச்சொத்து தனிநபர்களின் லாபத்திற்காக கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க வருவாய்த்துறையினரும், கனிம வளத்துறையினரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதான் அனைவரின் விருப்பம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...