சொகுசு பஸ்களாக மாறும் தாழ்தள பஸ்கள்
திருநெல்வேலி, மே 11: தாழ்தள பேருந்துகளை, சொகுசு பஸ்களாக மாற்றி நீண்ட தூரத்துக்கு இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்களில் வழக்கமாக வசூலிக்கப்படும் அதிகமான கட்டணத்தைவிட, மேலும


திருநெல்வேலி, மே 11: தாழ்தள பேருந்துகளை, சொகுசு பஸ்களாக மாற்றி நீண்ட தூரத்துக்கு இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த பஸ்களில் வழக்கமாக வசூலிக்கப்படும் அதிகமான கட்டணத்தைவிட, மேலும் கூடுதலான கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை கோட்டத்தில் நவீன வசதிகளுடன் தாழ்தள பஸ்களை இயக்கத் தொடங்கியது. இந்த பஸ்களில் சாதாரண பஸ்களைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனால், இந்த பஸ்களால் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நஷ்டம் ஏற்படத் தொடங்கியது.
இதையடுத்து, தனியார் பஸ்கள் இயங்காமல் அரசு பஸ்கள் மட்டும் இயங்கும் வழித்தடங்களில் அதிக கட்டணத்துடன் தாழ்தள பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்காக அந்த வழித்தடங்களில் வழக்கமாக இயக்கப்பட்ட சாதாரண பஸ்களை வேறு வழித்தடங்களுக்கு போக்குவரத்துக் கழகம் மாற்றியது. இதனால், மக்கள் வேறு வழியின்றி, தாழ்தள பஸ்களில் ஏறவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த மாதம் திருநெல்வேலி மண்டலத்துக்கு கூடுதலாக 40 தாழ்தள பஸ்கள் வழங்கப்பட்டன. இவை மதுரையில் இயக்கப்பட்ட 40 பழைய தாழ்தள பஸ்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே உள்ள தாழ்தள பஸ்களை இயக்குவதற்கே திணறி வந்த போக்குவரத்துக் கழகம், தற்போது மேலும் 40 பஸ்கள் வழங்கப்பட்டதால், அதை ஊரகப் பகுதி பஸ்களாக இயக்குகிறது. குறிப்பாக திருநெல்வேலி - நாகர்கோவில், திருநெல்வேலி - திருச்செந்தூர், திருநெல்வேலி - தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் தாழ்தள பஸ்களை, நீண்ட தூர சொகுசு பஸ்களாக மாற்ற போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்கட்டமாக 16 பஸ்கள் சொகுசு பஸ்களாக மாற்றப்படுகின்றன. இப் பணி, பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள பஸ் கூண்டு கட்டும் பிரிவு பணிமனையில் நடைபெற்று வருகிறது.
அங்கு தற்போது 3 பஸ்களுக்கு கூண்டு கட்டப்படுகிறது. இந்த பஸ்கள் முதல்கட்டமாக திருநெல்வேலியில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும். பின்னர் தூத்துக்குடி, திருச்செந்தூர், பாபநாசம், தென்காசி ஆகிய பகுதிகளில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளுக்கு இயக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த பஸ்களில் நவீன "பிஎஸ் 3 என்ஜின்கள்' பொருத்தப்பட்டிருப்பதால் நீண்ட தூர ஊர்களுக்கு இயக்குவதில் எந்த பிரச்னையில் இருக்காது. மேலும், இந்த பஸ்கள் அனைத்தும் விடியோ கோச் ஆக மாற்றப்பட்டுள்ளன. முன்பு, நகர்ப் பேருந்துகளில் இருப்பதுபோல 44 சீட்கள் மட்டுமே இருந்தன. தற்போது இந்த சீட்கள் 55 சீட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சீட்கள் அனைத்தும் "குஷன்' செய்யப்பட்டது என போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பஸ்ஸின் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. தற்போது ஊரகப் பகுதிகளில் பஸ்களில் கிலோ மீட்டருக்கு 28 பைசா என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படவுள்ள பஸ்களில் 38 பைசாவாக வசூலிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டணம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வசூலிக்கும் கட்டணத்துக்கு இணையானது.
இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால், இந்த பஸ்களுக்கும் பயணிகள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். அதேவேளையில் சாதாரண பஸ்களிலேயே கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற ஊர்களுக்கு தற்போது பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால், அந்த பஸ்களை காட்டிலும் சொகுசாகவும், வேகமாகவும் செல்லக்கூடிய இந்த பஸ்களுக்கு வரவேற்பு கண்டிப்பாக இருக்கும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...